நடிகராக தன் திரைப்பயணத்தை துவங்கியவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பல பெரிய படங்களை தயாரித்துள்ளார். STR நடித்த தம், விக்ரமின் மஜா, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா, மோகன்லாலின் வில்லன், சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
பெங்களூரில் வசித்து வரும் ராக்லைன் வெங்கடேஷ் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. வெங்கடேஷின் மகன் அபிலாஷ் மருத்துவர் என்பதால் அவரே சிகிச்சை அளித்து வருகிறார். ராக்லைன் வெங்கடேஷுக்கு என்ன பிரச்சனை என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை. கொரோனா வைரஸ் பரவும் இந்த சூழலில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள்.
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானவர் வெங்கடேஷ். அம்பரீஷுக்கு நினைவு மண்டபம் கட்டுவது தொடர்பாக ராக்லைன் வெங்கடேஷும், சுமலதாவும் அண்மையில் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ராக்லைன் வெங்கடேஷ் நடித்திருந்தார். அவர் தற்போது கன்னட நடிகர் தர்ஷனின் வரலாற்று படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு துவங்க வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஷூட்டிங் துவங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் திரைத்துறை சார்ந்த பலரும் உடல் நலம் பாதித்த செய்தி நம் செவிகளுக்கு எட்டியது. இதிலிருந்து மீண்டு இயல்பு நிலை திரும்புவதே நம் லட்சியம் என்று பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.