தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தற்போது குறிப்பிடப்படும் நடிகைகளின் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த மகேஷின்டே பிரதிகாரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான லிஜோமோல் ஜோஸ், கட்டப்பனையில ரித்திக் ரோஷன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து ஹனி பீ 2.5, பிரேம சூத்திரம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்த லிஜோமோல் ஜோஸ், இயக்குனர் சசி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து முதல் முறை நடிகர் சூர்யாவுடன் இணைந்த லிஜோமோல் ஜோஸ் நடித்த திரைப்படம் ஜெய்பீம்.
மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் நடந்தேறிய துயரங்கள் குறித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. உலக அளவில் கவனிக்க வைத்த ஜெய் பீம் திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் திரையிடப்பட்டதோடு விருதுகளையும் வென்று குவித்தது. முன்னதாக ஆஸ்கார் விருதுகளுக்கான முதற்கட்ட போட்டிகளுக்கு தேர்வான ஜெய் பீம் திரைப்படம், கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலுக்கான போட்டியிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெய் பீம் திரைப்படத்திற்க்கு பிறகு லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்ததாக மலையாளத்தில் புலிமடா, Her, மற்றும் அயல்வாசி ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் லிஜோல் ஜோஸ் தமிழில் இயக்குனர் லியனல் ஜோஷ்வா இயக்கத்தில் உருவாகும் அன்னபூரணி எனும் திரைப்படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா உடன் இணைந்து தற்போது நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளிவர தயாராகி வரும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. லென்ஸ், டி மஸ்கிட்டோ ஃபிலாசஃபி மற்றும் சமீபத்தில் வெளிவந்த தலைக்கூத்தல் ஆகிய படங்களின் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் என்பது பொதுவுடைமை படத்தில் லிஜோமோல் ஜோஸ் உடன் இணைந்து ரோகிணி, அனுஷா, தீபா, வினித் மற்றும் காலேஷ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் வெளிவந்து பலதரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன், ஃப்ரீடம் ஃபைட் மற்றும் ஸ்ரீ தன்யா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜோ பேபி வழங்கும் காதல் என்பது பொதுவுடமை திரைப்படத்திற்கு ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில், கண்ணன் நாராயணன் இசை அமைக்க, டேனி சார்லஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது காதல் என்பது பொதுவுடமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து பலரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் வகையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தோடு வெளிவந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்ததல்ல இரண்டு மனங்கள் சார்ந்தது என்பதை உரக்கச் சொல்லும் வகையில் காதலர் தினமான இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி காதல் என்பது பொதுவுடமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் என்பது பொதுவுடமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…