தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நவம்பர் 27ஆம் தேதி தனது தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுவரை இயக்குனராக அட்டகாசமான படைப்புகளை வழங்கி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இனி தனது தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாகவும் தொடர்ந்து அதிரடியான படைப்புகளை வழங்குகிறார் இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு G ஸ்குவாட் என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விரைவில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் திட்டமிருப்பதாகவும் அதில் தனது நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த நிலையில், தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்போடு அந்த அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார். இது குறித்த தனது அறிவிப்பில்,
“வணக்கங்கள்,
5 படங்களை இயக்கிய பிறகு, கதைசொல்லல் மற்றும் பொழுதுபோக்கின் நிலப்பரப்பை மறுவரையறை செய்ய அர்ப்பணித்த எனது தயாரிப்பு முயற்சி - ஜி ஸ்குவாட் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் சில தயாரிப்புகளில் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் அவர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஊக்குவிக்க, அவர்கள் அந்த படைப்புகளை செய்கிறார்கள்.
நீங்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்த அதே ஆதரவை, என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் கொடுத்து நீங்கள் அனைவரும் பார்த்து, ரசித்து, பொழிய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
அமைதியாக இருங்கள் மற்றும் எங்கள் முதல் தயாரிப்பு முயற்சியின் அறிவிப்புக்காக காத்திருங்கள்.
அளவற்ற அன்புடன்,
லோகேஷ் கனகராஜ்”
என தெரிவித்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த அறிவிப்பு இதோ...
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து கைதி திரைப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மூன்றாவது திரைப்படமான மாஸ்டர் படங்கள் தளபதி விஜய் உடன் இணைந்த பிறகு நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார். அடுத்தடுத்து பிளாக் பாஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து உருவாக்கிய விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக, 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில் தனது ஐந்தாவது படத்தில் மீண்டும் தளபதி விஜய் உடன் லியோ படத்தில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் வெளிவந்த லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸிலேயே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதில் கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களை கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யுனிவர்ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 திரைப்படத்தை அடுத்து இயக்குகிறார். இந்த திரைப்படம் ஒரு தனி படமாக இருக்கும் என்றும் இது LCUவில் சேராது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துவிட்டார். விரைவில் தலைவர் 171 திரைப்படத்தின் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது தனது G SQUAD தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.