80 களின் ஆரம்ப காலம் தொடங்கி இன்றைய நவீன கால தமிழ் சினிமா வரை தன் அசாத்ய நடிப்பு திறமையின் மூலம் தனித்துவமான உடல் மொழியின் மூலம் பல தசாப்தங்களாக ரசிகர்களை உற்சாகப் படுத்தி வரும் நடிகர் மனோபாலா.. நடிகராக மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட மிக முக்கியமான திரைப்படங்களை இயக்கி அன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்தார். ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை காலத்திற்கு ஏற்ப புதுபித்து கொண்ட கலைஞன் மனோபாலா இன்று உடல் நல குறைவு ஏற்பட்டு காலமானார். அதிர்ச்சியை ஏற்படுத்திய அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும் மனோ பாலாவுடன் பல படங்களில் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் சாம்ஸ் மனோபாலா குறித்தும் அவரது கடைசி திரைப்படம் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நண்பர் கதிர்வேல் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்திற்காக நடிகர்கள் மனோ பாலா எம்.எஸ்.பாஸ்கர் இளவரசு மாரிமுத்து விச்சு படவா கோபி கணேஷ்கர் நான் என பலரும் பொள்ளாச்சியில் இருந்தோம். அனேகமாக இதுதான் அவரது கடைசி படம் என்று நினைக்கிறேன்... ஒரு நாள் அவரே தயாரித்த சாப்பாட்டை எனக்கும் இன்னும் சிலருக்கும் ரூமிற்கு கொடுத்து அனுப்பினார்.... அவ்வளவு ருசி...

மறுநாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனோபாலா சார் ஷூட்டிங்கு வரவில்லை என்று சொன்னார்கள். கேள்விப்பட்டு நானும் நண்பர் கணேஷ்கரும் மாலை அவரது ரூமிற்கு சென்று ஆறுதல் அளித்துவிட்டு... பிரார்த்தனை செய்து விட்டு வந்தோம்... சோர்வாக இருந்தபோதும் அவருக்கே உரித்தான பாணியில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போய்... ஹாஸ்பிடலில் சேர்ந்து சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று இறந்துள்ளார்.. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்... பிராத்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது அந்த பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

மேலும் இதனுடன் படப்பிடிப்பில் மனோபாலா பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட வீடியோவினை பகிர்ந்துள்ளார். அதில் குறவர்களை போல் வேடமிட்டிருக்கும் மனோபாலாவுடன் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் உள்ளனர்.

மனோபாலா நடிப்பில் இந்த ஆண்டு கொன்றால் பாவம், வால்டர் வீரய்யா மற்றும் கோஸ்டி ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் நடித்து வருகிறார் என்று தகவல் சமீபத்தில் வெளியானது. இதனிடையே நடிகர் சாம்ஸ் பதிவின் மூலம் அவரது கடைசி படமாக யோகி பாபுவின் திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.