1985-ம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை கொல்லங்குடி கருப்பாயி. பிரபல நாட்டுப்புற பாடகியான கொல்லங்குடி கருப்பாயி ஆயுசு நூறு, ஏட்டிக்கி போட்டி, கோபாலா கோபாலா போன்ற படங்களில் நடித்தாலும், ஆண் பாவம் படத்தில் இவரது ரோல் அதிகளவில் ஈர்க்கப்பட்டது. எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்களை ஈர்த்த கொல்லங்குடி கருப்பாயி, 1993-ம் ஆண்டு அரசு அளித்த கலைமாமணி பட்டத்தை வாங்கினார்.
இந்நிலையில் கொல்லங்குடி கருப்பாயி சாலையை கடக்கும் போது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு லேசான காயங்கள் மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் காரைக்குடியில் நடந்ததாக தெரிகிறது. அவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டு படுக்கையில் படுத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவரது கால் சரியாக சில மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
கொல்லங்குடி கருப்பாயிக்கு 80 வயதுக்கு மேல் ஆகும் நிலையில் அவர் வறுமையில் வாடி வருகிறார் என்று இதற்கு முன்பு செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆயிரத்து ஐநூறு ரூபாய் அரசு கொடுக்கும் உதவித் தொகையை கொண்டு வாழ்ந்து வருகிறார் அவர். கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆல் இந்திய ரேடியோவில் கொல்லங்குடி கருப்பாயி பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அவரது கணவர் காலமானதால் ரேடியோ பணியை அவர் விட்டுவிட்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கொல்லங்குடி கருப்பாயி சிறிய ஓட்டு வீட்டில் வறுமையில் வசித்து வருகிறார் என செய்திகள் வந்தது. அந்த வீடும் இடிந்து விழும் நிலைமையில் தான் இருக்கிறது என அவர் கூறியிருந்தார். அவர் வறுமையில் இருப்பதாக செய்தி பரவிய பிறகு நடிகர் விஷால் மாதம் மாதம் அவருக்கு உதவித்தொகை அனுப்பி வருகிறார் என கூறப்பட்டது திரை வட்டாரம் அறிந்த செய்தியே. மருத்துவமனையில் இருக்கும் கொல்லங்குடி கருப்பாயி நலம் பெற கலாட்டா சார்பாக வேண்டுகிறோம்.