தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமாகவும் ஒட்டு மொத்த இந்தியாவும் வியந்து பார்க்க வைத்த திரைப்படமாகவும் கன்னட திரையுலகில் இருந்து வெளியான திரைப்படம் கேஜிஎஃப். இரண்டு பாகங்களாக உருவான கேஜிஎஃப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ம் ஆண்டு இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து அமோக வரவேற்பை பெற்றது. விமர்சனத்திலும் வசூலிலும் ஒரு தனி ட்ரேட் மார்க் பதித்தது கேஜிஎஃப் முதல் பாகம். முதல் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ரசிகர்களின் எதிரப்பார்ப்பின் மத்தியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இரண்டாம் பாகத்தினை மிகப்பெரிய அளவு கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் 1000 கோடிக்கு மேல்வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது.

கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கதாநாயகன் நீருக்குள் மூழ்குவதை போல் காட்சி அமைந்து படத்தை முடித்திருப்பார்கள். அதே நேரத்தில் கேஜிஎஃப் சாப்டர் 3-க்கான அறிவிப்பும் வெளியிட்டனர் படக்குழு.. எனவே இந்திய முழுவதும் ரசிகர்கள் கேஜிஎஃப் சாப்டர் 3 திரைப்படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாக கே ஜி எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS நிறுவனம் கேஜிஎஃப் சாப்டர் 3 திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் பரவியது, இதனிடையே கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிராசாந்த் நீல் அடுத்த பான் இந்திய திரைப்படமாக ‘சலார்’ படத்தினை பிரபாஸ் வைத்து தொடங்கி விட்டார். மேலும் பிரபாஸின் ‘சலார்’ படத்துடன் கேஜிஎஃப் படம் தொடர்பு இருக்கும் என்று சில வதந்திகளும் எழுந்தது.

இந்நிலையில் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்த நேரத்தில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் “சத்தியம் காப்பாற்றப்படுமா?” என்ற கேள்வியுடன் ‘3’என்று குறிப்பிட்டுள்ளனர் படக்குழு. மேலும் அதே வீடியோவில் 1978 முதல் 1981 வரை ராக்கி பாய் எங்கே இருந்தார் என்ற கதைக்கருவையும் ரசிகர்களுக்கு விட்டு சென்றுள்ளனர். பெரும்பாலும் மூன்றாவது பாகம் அந்த காலக் கட்டத்தில் இடம் பெற்றவையாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இதையடுத்து இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து அதனுடன் கேஜிஎஃப் 2 ஓராண்டு கொண்டாட்டத்தினையும் கொண்டாடி வருகின்றனர்.