ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகள் பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டுக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டால் பணத்தை இழந்த பலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த விளையாட்டில் பணத்தை இழந்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த விளையாட்டுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் தடை விதித்தன. இதை எதிர்த்து அந்த நிறுவனங்களும் வழக்கு தொடர்ந்துள்ளன. இதற்கிடையே, கேரளாவில் திருச்சூர் பகுதியை சேர்ந்த பாலி வடக்கன் என்பவர் இந்த விளையாட்டுக்கு எதிராகவும் இதை தடை விதிக்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவருடைய மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் அதிகமாக பிரபலமாகி வருகின்றன. இது சூதாட்டம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும். இது சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட வேண்டும். கேரளாவில் 1960 ஆம் ஆண்டின் சட்டம் உள்ளது. ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதில் ஆன்லைன் ரம்மி குறித்து எதுவும் கூறவில்லை.
இதன் தூதர்களாக இருக்கும் நட்சத்திரங்கள், பார்வையாளர்களை போட்டியில் பங்கேற்க தூண்டுகின்றனர் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், கேரள அரசு இதுபற்றி பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.
அதோடு, இந்த விளையாட்டின் விளம்பர தூதர்களான நடிகை தமன்னா, பிரபல மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமன்னா கைவசம் அந்தாதுன் தெலுங்கு ரீமேக் திரைப்படம் உள்ளது. நிதின் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் தமன்னா.