கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் பருத்திவீரன் படம் தொடர்பான விவகாரம் குறித்து இயக்குனர் அமீர் பற்றி கடுமையான விமர்சனங்களை வைத்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் அவரது 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. திரை பயணத்தில் 25 திரைப்படங்களை கடந்து இருப்பதையும் 20 ஆண்டுகளாக திரைத்துறையில் இருப்பதையும் கொண்டாடும் வகையில் இரு பெரும் விழாவாக நடைபெற்ற இந்த கார்த்தி 25 விழாவில், அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் கலந்து கொள்ளாதது பலவிதமான கேள்விகளையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.

இதன் பின்னணியில் பருத்திவீரன் திரைப்படத்தின் பிரச்சினை இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இயக்குனர் அமீர் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் இது குறித்து கேட்டபோது, “தன்னை அழைக்கவில்லை” என்று பதில் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜாவிடம் கேட்டபோது, இயக்குனர் அமீரை முறைப்படி அழைத்ததாகவும் அவர் வர மறுத்ததாகவும் தெரிவித்ததோடு இன்னும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனை அடுத்து இயக்குனர் அமீர் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரு விவரமான அறிக்கையை ஒன்றை வெளியிட்டு இன்று விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.

ஆனாலும் ஒருபுறம் இயக்குனர் அமீரை சாடி, தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா பேசிய சமீபத்திய பேட்டிகள் அனைத்தும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தின. அவற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் அமீருக்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் முன் வந்தனர். இயக்குனர் சசிகுமார், இயக்குனர் சமுத்திரக்கனி & பருத்திவீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் பருத்திவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலும் ரிலீஸ் சமயத்திலும் நடந்த உண்மைகளை உடைத்து அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் கரு. பழனியப்பன் உட்பட பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு KE.ஞானவேல் ராஜாவையும் கண்டித்தனர்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இது தொடர்பாக வருத்தம் தெரிவித்து தனது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,

'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!
அன்புடன்,
ஞானவேல்ராஜா

என தெரிவித்திருக்கிறார். அந்த அறிக்கை இதோ…