தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவராக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அட்டகாசமான படைப்புகளாக வழங்கி வரும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸாகி இருக்கும் திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் X. இந்த 2023 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளிவந்த இந்த ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படத்திற்கான திரையரங்குகளும் தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு லைட்ஸ் கேமரா அனாலிசிஸ் சிறப்பு நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “இந்த படத்தில் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கிறது ஒன்று ராகவா லாரன்ஸ் அவர்களை ஒரு தேர்ந்த நடிகராக பார்க்க முடிகிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். இரண்டாவது விஷயம் SJ சூர்யா அவர்களின் நடிப்பில் ஒரு சோகம் இருக்கிறது. அவருடைய மேனரிசத்தோடு சேர்த்து ஒரு சோகமான லேயரும் இருக்கிறது... அதைப் பற்றி விவரிக்க முடியுமா?” என கேட்ட போது,
“இரண்டு பேரையும் இரண்டு விதமாகத்தான் நான் கையாண்டு இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் கலந்து பேசினோம் நீங்கள் சொன்ன அந்த வார்த்தை தான், அந்த கதாபாத்திரம் அதற்குள் ஒரு வலியை படத்தின் ஆரம்பத்தில் இருந்து வைத்திருக்கிறது. அது சந்தோஷமாக இருக்கும் ஒரு காட்சி அந்த முதல் காட்சி தான். அங்கு மட்டும்தான் முழுமையாக சந்தோஷமாக அந்த SJ சூர்யா அவர்களின் கதாபாத்திரம் இருக்கும். அவருக்கு அந்த SI வேலை கிடைத்துவிட்டது கல்யாணம் ஆகப்போகிறது என்று சந்தோஷமாக இருப்பார். ஆனால் அவருடைய வாழ்க்கை அங்கே மாறி விடுகிறது. அதிலிருந்து இறுதிவரை அவர் எங்குமே சந்தோஷமாக இருக்கமாட்டார். அவருக்குள் ஒரு ஆழமான வலி இருக்கும். அவர் ஆசைப்பட்ட வேலை வாழ்க்கை எல்லாம் போய்விட்டதே என்று இருக்கும் அதை எப்படியாவது மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று என்னென்னமோ செய்கிறார். அதை அவருடைய திறமை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கதாபாத்திரத்திற்குள் ஒரு வலி இருக்கும். இதை முதல் முதலில் டிஸ்கஷனில் சொன்னது அதன் பிறகு தினமும் எல்லாம் சொன்னது கிடையாது. ஆனால் படம் பார்க்கும்போது சின்ன சின்ன விஷயங்களில் கூட அவர் அதை செய்திருக்கிறார். அவர் சாதாரணமாக பார்ப்பதாக இருக்கட்டும் ரொம்ப சந்தோஷமாக சிரிப்பதும் கூட படத்தின் இறுதிக்கு முன்பு ஒரு சின்ன தருணத்தில் தான் வரும். இதற்குக் காரணம் படம் முழுக்க அவர் அந்த கதாபாத்திரத்தை அணுகிய முறை தான்.”
என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.