தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கார்த்தி, தெலுங்கு சினிமாவின் நட்சத்திரம் நடிகரான ரவி தேஜாவின் புதிய பிரம்மாண்ட படத்திற்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார். முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். குக்கூ, ஜோக்கர், ஜிப்சி என குறிப்பிடப்படும் சிறந்த படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது LCUல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கைதி 2 திரைப்படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தெலுங்கு நடிகர் ரவி தேஜா அவர்களின் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். ஆந்திராவின் ஸ்டூரத்புரம் பகுதியில் 1970களில் மிகப் பிரபலமான மற்றும் பயங்கரமான கொள்ளைக்காரனாக வலம் வந்த நாகேஸ்வர ராவ்-ன் பயோபிக் படமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ண நாயுடு இயக்குகிறார். மாஸ் மகாராஜா என மக்களால் கொண்டாடப்படும் ரவி தேஜா உடன் இணைந்து காயத்ரி பரத்வாஜ், நிப்பூர் சனான் உள்ளிட்ட பலர் நடிக்கும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்ய, ஜீவி ப்ரகாஷ் குமார் இசையமைக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, நடிகர் ரவிதேஜாவின் திரை பயணத்தில் முதல் PAN INDIA திரைப்படமாக டைகர் நாகேஸ்வர ராவ் பிரம்மாண்டமாக தயாராகிறது.
டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற மே 24ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்னதாக இந்த டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ்-ஐ அறிமுகப்படுத்த அந்த ஐந்து நட்சத்திர நடிகர்களும் ஐந்து மொழிகளில் அவர்களது பின்னணி குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில் தெலுங்கில் நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் மலையாளத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் டைகர் நாகேஸ்வர ராவ்-க்காக குரல் கொடுத்துள்ளனர். இந்த வரிசையில் தமிழில் நடிகர் கார்த்தி குரல் கொடுத்திருக்கிறார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சிறுத்தை திரைப்படம் இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் ரவி தேஜா நடித்த விக்ரமர்குடு படத்தின் ரீமேக் தான். எனவே விக்ரமர்குடுவிற்காக சிறுத்தை குரல் கொடுத்திருப்பதாக, சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்காக கார்த்தி பிரத்தியேக டப்பிங் செய்த வீடியோவை டைகர் நாகேஸ்வர ராவ் படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.