தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கார்த்தி ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக ஆயுத எழுத்து திரைப்படத்தில் பணியாற்றினார். இதனையடுத்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார்.
தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், இயக்குனர் லிங்குசாமியின் பையா, இயக்குனர் சுசீந்திரனின் நான் மகான் அல்ல, இயக்குனர் சிவாவின் சிறுத்தை என அடுத்தடுத்த கார்த்தி நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இடையே ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தப்போதும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது.
அதன்பின்னர் நடித்த கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, தம்பி, சுல்தான் என தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரை பயணத்தில் வெற்றி நடை போட்டு வரும் கார்த்தி அடுத்ததாக இரும்புத்திரை & ஹீரோ படங்களின் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தயாராகியுள்ள விருமன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது 15 ஆண்டுகளை கடந்து உள்ளார் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், "பருத்திவீரன் எனது முதல் படமாக அமைந்தது வரம். பருத்திவீரனாக எனது ஒவ்வொரு சிறிய அசைவுகளையும் கூட இயக்குனர் அமீர் வடிவமைத்து கற்றுத்தந்தார். பருத்திவீரனுக்கான அத்தனை பெருமையும் அவரையே சேரும். இந்த அழகான பாதையில் என்னை பயணிக்க வைத்த அமீர் சார், ஞானவேல் அண்ணா, அன்பான ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி" என கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கார்த்தியின் அந்த அறிக்கை இதோ...
A big thank you!
— Actor Karthi (@Karthi_Offl) February 23, 2022
15 Golden Years since #Paruthiveeran! pic.twitter.com/FNzinrzZTG