மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் பிரபலங்கள் பலரும் கர்ணன் திரைப்பட குழுவினரை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
ரஜிஷா விஜயன், யோகி பாபு, லால், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே கர்ணன் திரைப்படம் உருவாகுவதாக படம் வெளியாவதற்கு முன்பே செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து படம் வெளியான பிறகு 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கர்ணன் திரைப்படத்தில் அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. அதன் பின்னர் கர்ணன் திரைப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்தில் இடம்பெற்றுள்ள தவற்றை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் சுட்டிக்காட்டியதாகவும் இன்னும் ஒருசில தினங்களில் அந்த தவறு சரி செய்துவிடுவதாக படக்குழு உறுதி அளித்துள்ளதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதன்பின்னர் கர்ணன் படக்குழுவினர் 1997 என்ற வருடத்தை 1990 இறுதியில் என மாற்றினார்கள். அதற்கும் அதிருப்தி குரல்கள் எழுந்தன. 1995 ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த ஒன்றை திமுக ஆட்சியில் நடந்தை போன்று சித்தரிப்பதற்கு என்ன காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். சமீபத்தில் யூடிப் சானலுக்கு பேட்டியளித்த மாரி செல்வராஜும் 1995 என போடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.
கர்ணன் திரைப்படத்தில் மூன்றாவது முறையாக வருடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை வருடம் எதையும் குறிப்பிடாமல், அடிப்படை தேவைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய கால கட்டம். சாட்சியாக பட்டாம்பூச்சி என மாற்றியுள்ளனர். இதனால் கர்ணன் திரைப்படம் சம்பந்தமான சர்ச்சைகள் முற்று பெற்று, தற்போது 50% பார்வையாளர்களுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்நிலையில் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த மேக்கிங் வீடியோவை வாங்கியுள்ளனர். நடிகர்களுக்கு மாரி செல்வராஜ் நடிக்க சொல்லி தருவது பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.