நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் குலதெய்வ வழிபாடு மையப்படுத்தி உருவான 'காந்தாரா' திரைப்படம் உலகளவில் கவனம் பெற்று அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் காந்தாரா திரைப்படத்தை அனைத்து மொழியிலும் டப் செய்யப்பட்டு அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்த படமாக மாறியது. மேலும் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாரித்து அதிக வசூல் குவித்த முக்கியமான இந்திய படம் என்ற பெருமையை தக்கவைத்துள்ளது காந்தாரா திரைப்படம். ஹோம்பாளே தயாரிப்பில் உருவான காந்தாரா திரைப்படம் தற்போது 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக இன்னமும் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் உலகின் உயர்ந்த விருதாக கருதக்கூடிய ஆஸ்கார் விருது 2023 பரிந்துரைப்பட்டியலில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது காந்தாரா திரைப்படம். ஆஸ்கார் பரிந்துரைக்கான இறுதி பட்டியல் வரும் ஜனவரி 24 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தின் மையக்கருவான 'பஞ்சுருளி' குலதெய்வ வழிபாட்டின் உண்மையான வழிப்பாட்டினை படக்குழுவினர் நேரில் சென்று பார்த்தனர். இது தொடர்பான பிரத்யேக வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதனுடன் "நீங்கள் இயற்கையிடம் சரணடைந்து, வாழ்க்கையில் இத்தகைய வெற்றியையும் சுதந்திரத்தையும் உங்களுக்கு வழங்கிய கடவுளை வணங்குங்கள். கந்தாரா படக்குழு தெய்வீகத்தை நிஜ வடிவில் தரிசனம் செய்து தெய்வத்தின் அருளைப் பெற்றனர்!" என்று பதிவிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து காந்தாரா படத்தில் பார்வையாளர்கள் பார்த்து ரசித்த காட்சியை போல் கிட்டத்தட்ட நிஜ பஞ்சுருளி கடவுள் வழிபாடு உள்ளது. இந்த வழிபாட்டினை இயக்குனர் ரிஷப் செட்டி எந்தளவு உள்வாங்கியிருந்தால் அவ்வளவு நேர்த்தியாக படத்தில் காட்சியமைத்திருப்பார் என்று ரிஷப் செட்டியை வாழ்த்தி ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மக்களின் வாழ்வியலை நேர்த்தியாக படமாக்கி கமர்ஷியலாக அதனை கையாண்டு உலகறிய செய்த படக்குழுவிற்கு நாளுக்கு நாள் மரியாதையையும் பாராட்டுகளும் கூடிக் கொண்டே வருகிறது.