உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் ஷங்கர் அட்டகாசமான புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பு வருகிறார். அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்களில் நடிக்க இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் KH234 படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்தில் திரைக்கதை எழுதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 2.O. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.O திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வரும் அடுத்த படைப்புக்காக இந்திய அளவில் பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் காத்திருக்கும் ரசிகர்களுக்கும் அடுத்தடுத்து டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 ஆகிய படங்களை ஷங்கர் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இந்தியன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணி இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு தடை பட்ட நிலையில் தற்போது தடைகள் நீங்கி மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகி நடிக்கும், இந்தியன் 2 படத்தில் சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியன் 2 திரைப்படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருக்கும் இந்தியன் 2 படக் குழுவினர் முன்னணி ஹாலிவுட் VFX நிறுவனமான LOLA VISUAL EFFECTS LLC நிறுவனத்துடன் இணைந்து இருக்கின்றனர். இது குறித்து இயக்குனர் ஷங்கர் LOLA VISUAL EFFECTS LLC நிறுவனத்துடன் இந்தியன் 2 படத்திற்காக பணியாற்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…