இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவான்களில் ஒருவராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் விரைவில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகும் KH233 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இயக்குனர் மணிரத்தினம் - கமல்ஹாசன் கூட்டணியில் KH234 திரைப்படம் தயாராக இருக்கிறது. இதனிடையே தற்போது சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் மாணவர் ஒருவர், “நடிக்கிறீர்கள் அரசியலில் இருக்கிறீர்கள் நேரத்தை எப்படி நீங்கள் மேனேஜ் செய்கிறீர்கள்?” என கேட்டபோது, "நான் நேரத்தை மேனேஜ் செய்வதே இல்லை நேரம் தான் என்னை மேனேஜ் செய்கிறது. நேரம் என் காதில் கிசுகிசுத்துக் கொண்டே இருக்கிறது. ரோமுக்கு சீசர்ஸ் பெரும் படையுடன் வரும்போது எல்லோரும் வரவேற்பு கொடுப்பார்கள் ஒரு பெரியவர் அவரது காதில் " Remember You Are Mortal" என தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார். இந்த புகழ் வட்டத்திற்கு மயங்கி விடாதே உனக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. எனக்கு அந்த குரல் 19 வயதில் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஒருமுறை மகாநதி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள், “சூரக்கோட்டையில் தங்கிக் கொள்ளலாமே” என தெரிவித்திருந்தார். அவருக்கு சூரக்கோட்டையில் ஒரு வீடு இருக்கிறது சரி தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்து இயக்குனர் சந்தான பாரதியிடம் தெரிவித்து விட்டோம். நாங்கள் கிளம்பி அங்கே போனபோது அவர் தேவர் மகன் படத்தில் வருவது போல அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். “ஐயா என்ன நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்?” என கேட்டபோது, “ஆமாம் ஒரு பெரிய நடிகர் வருகிறார் அல்லவா அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுமே” என்றார். பின்னர் அந்த வீட்டில் அவரோடு திண்ணையில் அமர்ந்து பேசிய தருணங்களில் என் நினைவில் நின்றதை நான் கவிதையாகவே எழுதி இருக்கிறேன். ஒரு முறை என்னிடம் பேசும்போது, “கமலா நேத்து தான் பார்த்தேன் ஸ்திரி பார்ட் போடுகிற ஒரு பையன் இதுவரைக்கும் முடி இருக்கும் கணேசன் என்று பெயர் இன்றைக்கு காலையில் கண்ணாடியில் பார்க்கிறேன் தாடி எல்லாம் வெள்ளை ஆகி விட்டதடா?” என்றார். பின்னர் என் தோலை தட்டிக் கொடுத்துவிட்டு உனக்கும் அப்படி ஆகும் பாரேன் என்று கவிதை மாதிரி சொன்னார். அந்த மாதிரி குரல்கள் எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதுதான் எனக்குத் தெரிந்த டைம் மேனேஜ்மென்ட் அதைத் தவிர வேறு ரகசியம் எனக்கு தெரியாது தம்பி.." என பதிலளித்தார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடனான தனது அனுபவத்தை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசிய டைம் மேனேஜ்மென்ட் குறித்த இந்த உரை மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.