தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெயராம். தமிழில் முறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, பஞ்ச தந்திரம், ஏகன், துப்பாக்கி ஆகிய படங்களில் ஹீரோ மற்றும் காமெடி வேடங்களில் கலக்கியிருப்பார். இந்த வருடம் அல்லு அர்ஜூனுடன் இணைந்து அலவைகுந்தபுறமுலோ படத்தில் நடித்திருந்தார். ஜெயராமின் மகன் மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கவிருக்கும் ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக வெற்றிமாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து ஒரு ஆந்தாலஜி படமொன்றை இயக்கியுள்ளனர். அனைவருடைய படமுமே அரை மணி நேரம் கொண்ட படமாக இருக்கும்.
சுதா கொங்கரா இயக்கியுள்ள படத்தில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். பழநிக்கு அருகிலேயே ஒட்டுமொத்தமாகப் படமாக்கி முடித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் உருவாக்கியுள்ள இந்த ஆந்தாலஜி படத்தின் ஒவ்வொரு கதையுமே ஆணவக் கொலையைப் பின்னணியாகக் கொண்டதாகும்.
இந்நிலையில் நடிகர் காளிதாஸ் தனது அப்பாவின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, உங்கள் சாக்குபோக்கை விட அதிகம் ஸ்டிராங்காக மாறுங்கள். இந்த மனிதர் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். நான் அந்த வயதில் பாதி செய்தாலே நான் அதிர்ஷ்டசாலியாக உணர்வேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஜெயராம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர்.கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்னரே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.