நடிகர் தனுஷ் தனது திரைபயணத்தில் 50-வது திரைப்படமாக தானே இயக்கி நடிக்கும் D50 திரைப்படத்தில் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிரபல நடிகர் இணைந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆகச்சிறந்த நடிகராக படிப்படியாக தன்னை வளர்த்து கொண்டு தற்போது தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என உலக அளவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி ஆக்சன் நிறைந்த பக்கா பீரியட் ஆக்சன் த்ரில்லர் படமாக கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கே உரித்தான ஸ்டைலில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக முதல் முறை தனுஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளிவந்த வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் புது படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் வடசென்னை 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தின் 50 ஆவது திரைப்படமாக தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் D50. ஏற்கனவே D50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளிவந்த நிலையில், இந்த திரைப்படத்தின் இயக்குனர் யார் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்த சினிமா வட்டாரத்திற்கும் ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தன் ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிப்பதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தனுஷின் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, கலை இயக்குனர் ஜாக்கி என்கிற ஜாக்சன், பப்ளிசிட்டி டிசைனர் கபிலன் செல்லையா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீ ராம் ஆகியோர் D50 திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர். இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகளுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனுஷுடன் இணைந்து D50 திரைப்படத்தில் நடிப்பதாக தற்போது செய்திகள் பரவி வருகிறது. நேற்று ஜூலை 5 மாலை D50 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் “புதிய ஆரம்பம்” என குறிப்பிட்டு, புதுப்பேட்டை படத்தின் "வரியா" பாடலை பதிவிட்டிருப்பதால் தனுஷ் உடன் D50 படத்தின் காளிதாஸ் ஜெயராம் இணைந்திருப்பதாக தற்போது செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் காளிதாஸ் ஜெயராமின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இதோ…