“காப்பான்” திரைப்படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தமைக்காக நடிகர் சூர்யாவைக் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

கடந்த வாரம் வெளியான “காப்பான்” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில், விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் தரும்படியான காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.

இதனால், இயற்கையை நேசிக்கும் இளைஞர்கள் மத்தியில் சூர்யாவிற்கும், “காப்பான்” படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், தனது திரைப்படத்தில் விவயாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்காக, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேரில் வந்து பாராட்டும் விதமாக, நடிகர் சூர்யாவிற்கும், இயக்குநர் கே.வி.ஆனந்திற்கும் பொன்னாடைப் போற்றி நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையைப் படமாக்கி கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாயிகளின் பிரச்சினையைப் படமாக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் “காப்பான்” படம் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட நடிகர் சூர்யாவுக்கும், இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளின் அழைப்பை ஏற்று, நடிகர் சூர்யா காவிரி டெல்டா பகுதிகளுக்கு வருவதாக உறுதி அளித்தார்.