கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் தனுஷ் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல வில்லன் நடிகர் மீண்டும் இணைந்திருக்கிறார். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட ஆக்சன் படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெறாமல் நடைபெற்றதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. முன்னதாக தென்காசியின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடிவாரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால் வன உயிர்களுக்கும் காடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடைபெறுவதாக புகார் அளிக்கபட்டது. “இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என மாண்புமிகு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள், தெரிவித்தார். தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மதுரையில் நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பும் உரிய அனுமதி பெறாமல் வனப்பகுதியில் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த போது, "உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்த கட்டாயமாக அரசு அனுமதிக்காது. இருப்பினும் நீங்கள் கொடுத்த புகார் கட்டாயமாக விசாரணைக்கு உட்படுத்தப்படும்" என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் மாதத்திலும், டீசர் வரும் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக பாகுபலி, கே ஜி எஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவரும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் அசத்தியவருமான நடிகர் ஜான் கொக்கென் சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த போது அதற்காக படப்பிடிப்பிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது விடுப்பு முடிந்து மீண்டும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு ஜான் கொக்கென் தெரிவித்திருக்கிறார். நடிகர் ஜான் கொக்கெனின் அந்த பதிவு இதோ…