தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா நடிப்பில் தமிழில் இந்த ஆண்டு கடைசியாக வெளிவந்த திரைப்படம் காஃபி வித் காதல். கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி - ஜீவா - ஜெய் கூட்டணியில்  தயாராகி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக இயக்குனர் பொன் குமரன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள கலகலப்பான காமெடி திரைப்படமாக கோல்மால் திரைப்படம் தயாராகி வருகிறது. விரைவில் கோல்மால் திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வரலாறு முக்கியம்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் R.B.சௌத்ரி தயாரிக்கும் ரொமான்டிக் காமெடி திரைப்படமான வரலாறு முக்கியம் திரைப்படத்தில் காஷ்மிரா பரதேசி மற்றும் பிரக்யா நக்ரா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இயக்குனர் K.S.ரவிக்குமார், VTV கணேஷ், மொட்டை ராஜேந்திரன், TSK, சாரா சரண்யா மற்றும் சித்தீக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரலாறு முக்கியம் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் வரலாறு முக்கியம் திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி உலகுக்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பரில் சிலம்பரசன்.TRன் பத்து தல, விஜய் சேதுபதியின் DSP, விஷாலின் லத்தி, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படமான அவதார் தி வே ஆஃப் வாட்டர்(அவதார் 2) ஆகிய திரைப்படங்களும் ரிலீஸாக இருக்கும் நிலையில், ஜீவாவின் வரலாறு முக்கியம் திரைப்படமும் டிசம்பர் ரேசில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.