தமிழ் சினிமா வரலாற்றில் காலத்தால் அழியாத படைப்புகளாக தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமாக இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுடன் முதல் முறையாக இணைகிறார். கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி உள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்கும், விடுதலை திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் விடுதலை பாகம் 1 திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனிடையே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட ஜெயமோகன் அவர்களிடம் விடுதலை திரைப்படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் அணுடியது குறித்து கேட்டபோது,

“வெற்றிமாறனை ஏற்கனவே எனக்கு அறிமுகம் உண்டு இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களின் மாணவர் அவர். என்னுடைய நெருக்கமான நண்பர் சுகா.. எழுத்தாளர் சுகா… அவருடைய ஜூனியர் அவர். நாங்கள் ஆண்டுதோறும் எங்களுடைய வாசகர் வட்டம் சார்பில் ஒரு விருது கொடுத்து வந்தோம் கோவையில் கொடுப்போம். மூத்த எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்போம். அந்த விருதை கொடுப்பதற்கு தமிழ் சினிமாவில் முக்கிய திரை கலைஞர் ஒருவரை அழைக்கும் வழக்கம் உண்டு. அப்படி முதல் விருதுக்கு இயக்குனர் மணிரத்னம் வந்திருந்தார். பாரதிராஜா வந்திருக்கிறார்.. இளையராஜா வந்திருக்கிறார்.. அப்புறம் இயக்குனர் பாலா வந்திருக்கிறார்.. பாலா வந்தால் வெற்றிமாறனும் வரவேண்டும் அல்லவா.. இயக்குனர் வெற்றிமாறனும் வந்திருக்கிறார். எனக்கு அவர் மிகவும் பழக்கம். அவர் ஒரு படம் கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் இருந்தார். ஸ்கிரிப்ட் நிறைவடைந்து படத்தை தொடங்கக்கூடிய இடத்தில் இருக்கிறார். அஜ்நபி என்று ஒரு படம் இதை எனது நண்பர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீராண் மைதீன் என்பவர் எழுதினார். அந்தப் படம் கொரோனாவால் நின்றது அவர்கள் படபிடிப்பு நடத்த வேண்டிய எந்த ஊருக்கும் போக முடியாத சூழ்நிலையாகிவிட்டது. அந்த அஜ்னபி இப்போது நின்றிருக்கிறது எப்போது இருந்தாலும் அது படமாக வந்துவிடும் நான் அண்மையில் மீரான் மைதீனை பார்த்தபோது நீங்களே கூட இதை இயக்கலாம் என சொல்லி இருந்தேன். அது நின்ற உடனே உடனடியாக ஒரு கதை தேவைப்பட்டது அப்படித்தான் கைதிகள் என்ற என்னுடைய ஒரு கதையை கேட்டார்கள் அந்த கதையை நான் என்னுடைய நண்பர் ரபீக் இஸ்மாயில் என்பவருக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்து விட்டேன். ஆகவே வேறு கதை என வந்த போது தான் இந்த துணைவன் கதையை கொடுத்தேன்." என எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரசியங்களை பகிர்ந்த ஜெயமோகன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…