கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் இசையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை இசைப்புயல் AR.ரஹ்மானையே சாரும். தனக்கென தனி ஸ்டைலில் ரசிகர்களின் ரசனையை மெருகேற்றி திரை இசையில் எண்ணற்ற புதுமைகளையும் இசையின் ஒலியில் புதிய சத்தங்களையும் கொடுத்த AR.ரஹ்மான் இந்திய சினிமாவின் இசை புரட்சியாளர்.

உலகமே கொண்டாடும் இந்த ஆஸ்கார் தமிழன் இன்று (ஜனவரி 6)தனது 55வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இசைப்புயல் AR.ரஹ்மான் பிறந்தநாளுக்கு கலாட்டா குழுமம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பல கோடி ரசிகர்களும் பிரபலங்களும் AR.ரஹ்மானுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த 2023-ஆம் ஆண்டிலும் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, அயலான், ஆடுஜீவிதம், லால் சலாம், மாமன்னன், காந்தி டாக்ஸ் (மௌன படம்) உள்ளிட்ட படங்களில் இசைப்புயல் ரசிகர்களை ஆக்கிரமிக்க உள்ளது. மேலும் நாயகன் படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் KH234 படத்திற்கும் AR.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தனது பிறந்த நாளான இன்று உலக அளவில் பல தரப்பட்ட கலைஞர்களும், வளரும் கலைஞர்களும் தங்களது கலையை உலகறிய தங்களது திறமை உலக அளவில் எங்கும் சென்று சேர இசைப்புயல் AR.ரஹ்மான் சர்வதேச அளவிலான புதிய தளத்தை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே இசை கலைஞர்களுக்கான மாஜா எனும் தளத்தை அமைத்த AR.ரஹ்மான் தற்போது மேலும் ஒரு உலகத்தர டிஜிட்டல் தளத்தை அமைத்திருக்கிறார்.

மேலும் இந்த தளத்திற்கு தமிழில் கற்றார் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள AR.ரஹ்மான் உலக தரத்தில் சர்வதேச கலைஞர்களின் படைப்புகள் விரைவில் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உலகத்தர டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கும் அதற்கு தமிழில் கற்றார் என பெயரிட்டதற்கும் இசைப்புயல் AR.ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.