தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
திரையுலகில் விவேக்கின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அரசால் வழங்கப்படும் 4-வது உயரிய விருதாகும். பத்மஸ்ரீ விருது வென்றுள்ள விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. சமூகத்தின் மீதும், சுற்றுச்சூழலின் மீதும் அவருக்கிருந்த அக்கறை அவரது திரைப்படங்களிலும், அவரது வாழ்க்கையிலும் பிரகாசித்தது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
The untimely demise of noted actor Vivek has left many saddened. His comic timing and intelligent dialogues entertained people. Both in his films and his life, his concern for the environment and society shone through. Condolences to his family, friends and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 17, 2021