எல்லைப் பகுதியான லடாக்கில் இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரை அடுத்த லடாக் பகுதியில் உள்ள பன்கோங் ஏரியைச் சுற்றிய பகுதியில், மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மற்ற பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அத்துடன், பன்கோங் அருகில் உள்ள சில பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன.
இந்நிலையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட பன்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நேற்று பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சீன ராணுவ வீரர்கள், இந்திய வீரர்களை அங்கிருந்து வெளியேறும்படி எச்சரித்தனர். இதனால், இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்குப் பதற்றமான சூழல் உருவானது. இரவு நேரம் வரை அங்குப் பதற்றமான சூழலே காணப்பட்டன.
இதனையடுத்து, இரு தரப்பிலிருந்தும் உயர்மட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பு வீரர்களும் தங்களது முகாம்களுக்குத் திரும்பினர். இதனால், எல்லையில் பற்றம் தணிந்தது.
சீனா அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் அடுத்த மாதம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையல், இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் மோதல் போக்கில் ஈடுபட்டது பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.