தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் எக்கச்சக்கமான பாடல்களை பாடி அனைத்து மொழி ரசிகர்களையும் தன் கம்பீரமான குரலின் மூலம் மயக்கி வந்த பாடகர் எஸ் பி பி சில நாட்களுக்கு முன்பு கொரானா நோய்த்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேட்ட பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் நடிகர் ராதாரவி எஸ் பி பி-யின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ அவரின் நினைவாக விரைவில் திறக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம். எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மறைவு திரை உலக பிரபலங்களை மட்டுமல்ல அரசியல் தலைவர்களை மட்டுமல்ல கோடான கோடி இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி என பலரும் எஸ்பிபி மறைந்த துயரத்தையும் ஏற்று கொள்ள முடியாத இழப்பையும் தாங்கியவாறு தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி செப்டம்பர் 30 ஆம் தேதி டப்பிங் யூனியனில் வாழ்நாள் உறுப்பினரான எஸ் பி பி யை கௌரவிக்கும் விதமாக டப்பிங் யூனியன் செயற்குழுவினருடன் ஒன்றிணைந்து எஸ்பிபி-யின் திருவுருவ படத்தை திறந்து வைத்து இரங்கல் தெரிவித்திருந்தார்.

மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை இசைத்துறை சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

அனைத்து ரசிகர்களுக்கும் தமிழ் திரையுலகிற்கு மிகவும் நெருக்கமான எஸ்பிபி இன்றுவரை எக்கச்சக்கமான பாடல்களை பாடியிருக்கும் நிலையில் கடைசியாக ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஓபனிங் சாங்கை பாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 2ம் வாரம் முதல் துவங்க உள்ளது என தகவல் பரவி வருகிறது. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஹைதராபாத்தில் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட எஸ்பிபி-யை கௌரவிக்கும் விதமாக ராதாரவி தனது குழுவுடன் இணைந்து விரைவில் எஸ்பிபி-யின் பெயரில் டப்பிங் ஸ்டுடியோ உருவாக்க உள்ளதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.