இதுவரை இல்லாத புதுமையை பழந்தமிழ் வாயிலாக கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்களை எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் தன் முத்திரையை பதித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் பாகம் 2 வருகிற ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்யேக பேட்டி கொடுத்த பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் பதிவின் போது சில பாடல்களை ஒரு மணி நேரத்திற்குள்ளாக எழுதி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசுகையில்

"நான் எங்காவது வெளியில் சென்று கொண்டிருப்பேன் இரவு ஒரு எட்டு மணி ஒன்பது மணி வாக்கில் கூப்பிடுவார்கள். “எங்கே இருக்கிறீர்கள்” என்பார்கள் நான் இந்த மாதிரி வெளியில் இருக்கிறேன் என சொன்னதும் “உடனே ஆபீசுக்கு வாருங்கள்” என கூப்பிடுவார். ஆபீசுக்கு போவேன்… போனதும் ஒரு டியூன் கொடுப்பார்கள். "உடனே எழுதிக் கொடுங்கள்" என கேட்பார்கள். உட்கார்ந்து அங்கேயே எழுதிக் கொடுப்பேன். வெறும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் பாடல்கள் முடிந்திருக்கின்றன. ஒரு 8 மணிக்கு சென்று 11 மணி என்ற சமயத்தில் ரெக்கார்டிங்கே முடிந்துவிடும். RR பாடல்களை எல்லாம் அந்த மாதிரி செய்திருக்கிறோம் பொன்னியின் செல்வன் 2-வில் அந்த பாடல்கள் வருகின்றன. அவையெல்லாம் வெறும் ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட்ட பாடல்கள். பொன்னியின் செல்வன் 1ல் ஒரு பாடல் வரும் கிளைமாக்ஸ் பிறகு பொன்னியின் செல்வன் கடலில் விழுந்த பிறகு பாடுகிற ஒரு பாட்டு வரும் அல்லவா? அந்தப் பாடல்கள் எல்லாம் ஒரு ஒரு மணி நேரம் அரை மணி நேரத்தில் முடிக்கப்பட்ட பாடல்கள் தான். ஒரு மூன்று மணி நான்கு மணி அளவில் கூப்பிடுவார்கள் போவேன் போனதும் இந்த மாதிரி இந்த இடத்தில் ஒரு பாடல் தேவைப்படுகிறது என்பார்கள். அதை 6-7 மணிக்குள் எழுதி முடித்து 8 - 9 மணிக்குள் மொத்த பாடலும் முடிந்து விடும்." என்றார் இளங்கோ கிருஷ்ணன்.

அதேபோல் சோழா சோழா பாடலும் ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது தான் என்று பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அது குறித்து பேசுகையில், "ஒரு நாள் காலையில் 11 மணி அளவில் மணிரத்தினம் சார் என்னை அழைத்தார். "இளங்கோ அந்த சோழ சோழ பாடலை முடிக்க வேண்டும்" என்றார். முடிச்சிடலாம் சார் என்றேன் "இல்லை ஊரடங்கு போட்டு விட்டார்கள் நமக்கும் நேரமில்லை இதை விட்டு விட்டால் நாம் மீண்டும் பணியாற்ற முடியாது" என அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். இல்லை சார் இன்று இந்த பாடலை முடிக்கிறோம் என்று சொன்னேன். ஒரு நான்கு மணிக்கு உட்கார்ந்தோம் ஐந்து ஐந்தரை ஆகும்போது மொத்த பாடலையும் முடித்து விட்டோம்." என பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் முழு பேட்டி இதோ…