தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய #NTR30 படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் NTR30 திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த RRR திரைப்படம் உலக அளவில் பல கோடி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்ததோடு பல்வேறு விருதுகளையும் வென்று குவித்து வருகிறது.

அந்த வகையில் ஹாலிவுட் க்ரிடிக்ஸ் அசோசியேசன் ஃபிலிம் அவார்ட்ஸ் எனும் சர்வதேச விருது விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் RRR படம் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி லாஸ் ஏன்ஜலஸில் நடைபெற்ற விருது விழாவில் RRR திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்சன் திரைப்படம், சிறந்த ஸ்டண்ட் மற்றும் சிறந்த பாடலாக நாட்டு நாட்டு நாட்டு பாடல் என நான்கு விருதுகளை தட்டி சென்றது. இந்த விருது விழாவில் இயக்குனர் SS.ராஜமௌலி நடிகர் ராம் சரண் மற்றும் இசையமைப்பாளர் MM.கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். இருப்பினும் இந்த விருது விழாவில் நடிகர் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது மேலும் இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக ஜூனியர் என்டிஆர் க்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் செய்திகளாக பரவி வந்தன.

நான் ஈ , பாகுபலி 1&2 ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் SS.ராஜமௌலி தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்கிய RRR திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்தது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த RRR திரைப்படம் உலக அளவில் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து சமீபத்தில் ஜப்பானில் ரிலீசான RRR திரைப்படம் அங்கும் வசூல் சாதனையை படைத்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள RRR படத்தை DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ளார்.

அதேபோல் உலக அளவில் பல சர்வதேச விருதுகளையும் வென்று குவித்து வரும் RRR திரைப்படம், உலக சினிமாவில் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதை சமீபத்தில் வென்றது. RRR திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை இசையமைப்பாளர் MM.கீரவாணி கைப்பற்றினார். மேலும் ஆஸ்கார் விருதுகளுக்காகவும் நாட்டு நாட்டு பாடல் இறுதிப் போட்டிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது விரைவில் நடைபெறவிருக்கும் 95வது ஆஸ்கார் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆராரோ திரைப்படம் ஆஸ்கார் விருதை வெல்லும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே நடைபெற்ற ஹாலிவுட் க்ரிடிக்ஸ் அசோசியேஷன் ஃபிலிம் விருதுகள் விழாவில் 4 விருதுகளை RRR திரைப்படம் வென்ற நிலையில் விருது விழாவில் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளாததற்கு, அவருக்கு அழைப்பு விடுக்காதது தான் காரணம் என பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஹாலிவுட் கிரிடிக்ஸ் அசோசியேஷன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,
“அன்பான RRR ரசிகர்களுக்கு,
நாங்கள் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கும் ஹாலிவுட் க்ரிடிக்ஸ் அசோசியேஷன் ஃபிலிம் விருதுகள் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தோம். அவர் இந்தியாவில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். விரைவில் எங்களிடமிருந்து அவருக்கான விருதை பெற்றுக் கொள்வார். உங்கள் அனைவரது அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி”

எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவு இதோ…