இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி வித்தியாசமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீரன் திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. பாடகர், இசையமைப்பாளர், நடிகர் & இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் அன்பறிவு. முதல் முறை ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்த அன்பறிவு திரைப்படம் நேரடியாக Disney+ Hotstar தளத்தில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்து தயாராகி வரும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
அந்த வகையில் அடுத்ததாக தற்போது PT Sir எனும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் PT Sir திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் படம் தான் வீரன். முன்னதாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மின்னல் முரளி திரைப்படத்தின் பாணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள வீரன் திரைப்படத்தை மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் எழுதி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற வெள்ளிக் கிழமை ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வீரன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படத்தின் அந்த புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.