இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அன்பறிவு. ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடத்தில் நடித்த அன்பறிவு படத்தை தொடர்ந்து அடுத்து நடித்துள்ள வீரன் திரைப்படம் நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்களின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 23வது திரைப்படமாக தயாராகும் புதிய திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகராக ஹிப் ஹாப் ஆதியின் திரைப்பயணத்தில் 7-வது திரைப்படமாக #HHT7 தயாராகிறது.
இந்த #HHT7 திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்குகிறார். ஒரு பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும், இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்க, இளைய திலகம் பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, முனீஸ் காந்த், காஷ்மிரா பரதேசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் பூஜையோடு தொடங்கப்பட்ட #HHT7 திரைப்படத்தில் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில், GK.பிரசன்னா படத்தொகுப்பு செய்ய, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்நிலையில் #HHT7 படத்திற்கு “PT Sir” பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு, “PT Sir” படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…