தமிழ் சினிமாவில் மசாலா கமர்ஷியல் திரைப்படங்கள் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் படங்களை கொடுத்து மாஸ் காட்டியவர் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ். தமிழ் திரையுலகில் ஸ்டன்ட் குழுவில் இருந்து நடன குழுவில் இணைந்து பின் தமிழ் நெஞ்சங்களை துள்ளலான நடனத்தின் மூலம் கவர்ந்தவர் ராகவா லாரன்ஸ். பின் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் பாராட்டுகளை பெற்று பின் தெலுங்கில் மிக முக்கியமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தார். நடன கலையில் வித்தகாராக சாதித்து காட்டிய ராகவா லாரன்ஸ் பின் இயக்குனராகவும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் பெற்றார். சாதாரணமான திகில் படங்களை குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாற்றி ட்ரென்ட் செட் செய்த படமான முனி, காஞ்சனா 2,3 படங்கள் என வித்யாசமான முயற்சிகளையும் எடுத்து சாதித்தவர். தற்போது ராகவா லாரன்ஸ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் வெற்றிமாறன் எழுதி தயாரிக்கும் படமான ‘அதிகாரம்’ படத்திலும் மற்றும் பி வாசு அவர்கள் இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் எழுத்தில் இயக்குனர் ரத்னா இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இதனிடையே ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ருத்ரன்’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க வில்லனாக சரத்குமார் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் கதிரேசன். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் எதிர்பார்பில் இருந்த ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ட்ரீட்டாக வெளியாகவிருந்த நிலையில் படத்திற்கு திடீரென தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

இப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை பிரபல வெளியீட்டு நிறுவனம் ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தது. பின் எழுந்த சிக்கல்களால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ரேவேன்சா குளோபல் நிறுவனம் இது தொடர்பாக விசாரணை தொடங்கிய உயர்நீதி மன்றம் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 24 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து அதிர்ச்சியில் ரசிகர்கள் திக்குமுக்காடினார். படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் இது போன்ற தடையினால் ரசிகர்கள் முன்பதிவு செய்ய பின் வாங்கினர்.

ருத்ரன் திரைப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது காரணமாகவும் குடும்பங்கள் கொண்டாடும் ராகவா லாரன்ஸ் படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கையில் விடுமுறை தினமான தமிழ் புத்தாண்டில் வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

படம் வெளியிட வேண்டும் என்ற மனுதாக்கலை விசாரித்த உயர்நீதி மன்றம் இரு தரப்பினர் பிரச்சனையையும் மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு திரையரங்கம், ஓடிடி, சாட்லைட் ஆகியவற்றில் ஒளிபரப்பு செய்ய தடையை நீக்கியுள்ளது.

இதையடுத்து ருத்ரன் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கான முன்பதிவில் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொதுவாகவே ராகவா லாரன்ஸ் படம் என்றாலே குடும்பங்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் நம்பிக்கையுடன் செல்லலாம் என்று காலம் காலமாக அவர் படங்கள் மூலம் நமக்கு உணர்த்தி வருகிறார். அதன் வரிசையில் ருத்ரன் திரைப்படமும் இடம் பெரும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.