தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையில் கால்பதித்த இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திருமணப் புகைப்படங்கள் என குறிப்பிட்டு அமலா பாலுடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்த்திருந்தார் மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங். பிறகு அந்த புகைப்படங்களை அவர் நீக்கிவிட்டார். இதையடுத்து தனது திருமணம் குறித்த செய்தியை விரைவில் அமலா பால் தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஒரு பேட்டியில், எனது திருமணம் நடக்க இன்னும் சில காலமாகும். நான் தற்போது படங்களில் நடித்து வருகிறேன். அதுவரை எனது திருமணம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் முன்னாள் நணபர் பவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்த புகைப்படங்களையும் தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு வெளியிட்டுள்ளதாகவும் புகைப்படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பவ்னிந்தர் சிங்க்கு எதிராக சிவில் அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதோ அந்த பறவை போல எனும் படத்தில் நடித்துள்ளார் அமலா பால். செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரித்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அடர்ந்த காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது.