தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்கள் ஒரு புறம் வந்த வண்ணம் இருந்தாலும் மக்கள் சார்ந்து மண் சார்ந்த படங்களும் ஒருபுறம் வருகிறது. இந்த இரண்டு தரமான படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஒரு சேர வெற்றிபெறுவது தமிழில் அரிதாகவே உள்ளது. இந்த இரண்டு தரப்பையும் நேர்த்தியாக கையாண்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வெற்றிபெற வைப்பவர் இயக்குனர் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 31 ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. S இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க அட்டகாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவான விடுதலை படத்தின் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்க இவருடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பிரகாஷ் ராஜ், இளவரசு, பவானி ஸ்ரீ, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் பாடலும் படத்தின் முன்னோட்டமும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டி பின் படம் வெளியாகி மிகபெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் விடுதலை திரைப்படம் வெளியாகி தற்போது 11 நாட்கள் நிறைவடைந்த நேரத்தில் இணையத்தில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், இரண்டவாது வாரத்தில் விடுதலை திரைப்படம் தமிழ் நாடு பகுதிகளில் முதல் வாரத்தில் 9.86 கோடி ரூபாயும், இரண்டாவது வார வெள்ளி கிழமையில், 1.16 கோடி ரூபாயும், இரண்டாவது வாரம் ஞாயிற்று கிழைமையில் 1.31 கோடி ரூபாயும் பெற்று மொத்தம் 13.62 கோடியை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை திரைப்படம் வெளியான அதே வாரத்தில் பான் இந்திய திரைப்படமான நானியின் தசரா திரைப்படமும், சிலம்பரசன் நடிப்பில் அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக உருவான ‘பத்து தல’ திரைப்படமும் வெளியானது. இரண்டு பெரிய படங்களின் மத்தியில் விடுதலை திரைப்படம் வெளியானாலும் எந்தவொரு தட்டுபாடின்றி வரவேற்பை மக்கள் கொடுத்து வருவது வசூல் மூலம் தெரிய வருகிறது. இந்த வசூல் நிலவரத்தினை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி உற்சாகத்தில் மகிழ்ந்து வருகின்றனர்.