பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் இந்தாண்டின் முதல் பெரிய திரைப்படம் ‘வாரிசு’. விஜய் நடித்து கோலாகல கொண்டாட்டங்களுடன் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு படத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து 2021 ல் வெளிவந்த 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையடுத்து வாரிசு படத்துடன் மாஸ்டர் இரண்டாம் ஆண்டை #2yearsofmaster என்று இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அதன்படி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்கள் கொண்டாடி வரும் 5 காரணங்கள் என்ன என்பதை குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
1. தளபதி விஜய்
எப்படி விஜய் திரைப்பயனத்தில் ‘கில்லி’ , 'துப்பாக்கி' திரைப்படங்கள் ஒரு திருப்புமுனையோ அதே அளவிலான தாக்கத்தை 'மாஸ்டர்' திரைப்படம் விஜய்க்கும் அவரது திரைப்பயணத்திற்கும் கொடுத்துள்ளது. 'குடிக்கு அடிமையான வாத்தியார்' இந்த ஒன்லைன் விஜய் எப்படி ஏற்றுக் கொண்டார், இது அவருடைய வாழ்கை நெறிமுறைக்கு எதிரானதாக உள்ளதே என்று பல கேள்விகள் எழுந்தது. விஜய் படம் என்றாலே ஒரு டெம்ளேட் இருக்கும். அதை மாற்றி இங்கு சற்று மாறாக போதை தெளியாத ஆளாகவும், சுயநலமாகவும், யாரிடமும் ஒன்றாமல் தனக்கென்ற ஒரு நீதியை பின்பற்றும் ஆளாக திரையில் தொன்றிருப்பார். ஆரம்பத்தில் படம் முடிந்து விஜய் சேதுபதி கதாபாத்திரமே அதிகம் பேசப்பட்டாலும் அதன் பின் விஜயின் ஜே.டி என்ற பாத்திரம் பேசப்பட்டது. இன்று மட்டுமல்ல என்றும் மக்களுக்கு பிடித்த பாத்திரமாக இருக்கும். குறிப்பாக விஜய் தோற்றத்தை முழுவதும் மாற்றி எப்போதும் ஆங்கில பாடல் கேட்டு கொண்டு தினுசாக சுற்றி கொண்டு இருக்கும் ஒரு ஆளாக கொடுத்திருப்பார் லோகேஷ்.
முதல் பாதியில் அட்ராசிட்டி செய்யும் வாத்தியாராகவும் இரண்டாம் பாதியில் போதை பழக்கத்திற்கு எதிராக போரிட்டு கொண்டிருக்கும் மாஸ்டராகவும் விஜய் வருகிறார். ‘ஜே.டி student இல்லம்மா.. professor’ என்ற வசனமும் அதன் பின் வரும் பின்னணி இசையும் விஜயை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு போய் விடுகிறது.
வெறும் தோரணை , data-style மட்டுமா? தன் மீது நம்பிக்கை வைத்திருந்த இரண்டு சிறுவர்கள் இறந்த போது உறைந்து போய் நிற்கும் போதும், சிறுவர்கள் எழுதிய கடிதத்தை வாசிக்கும் போதும், விஜய் சேதுபதியிடம் சாவல் விடும் போதும், தன் மாணவர் ஒருவர் இறந்து போகும் போதும் அவரது நடிப்பு திறனை நேர்த்தியாக கொடுத்திருப்பார். ஒரு மாதிரி கலவையான கமர்ஷியல் ஹீரோ என்ற உச்சத்தை தாண்டி சென்றிருப்பார் விஜய். இந்த படத்தில் விஜய் எனும் நடிகன் மீது பரவலான மோகம் இன்னும் அதிகரித்தது.
2. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
பொதுவாக விஜய் படங்களில் நடிக்கும் சக நடிகர்களுக்கு திரையில் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கிடைக்காது. அப்படி இருக்கையில் விஜய்க்கு நிகராக, சொல்லப்போனால் விஜயின் ஜே.டி கதாபாத்திரத்தை விட சற்று கூடுதலான சுவாரஸ்ய பின்னணியை கொண்டிருக்கும் பவானி பாத்திரமே அதிகம் பேசப்பட்டது.
போதைக்கு அடிமையான சிறார்களை வைத்து கொலை, கொள்ளை கட்டப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களை செய்து வரும் மிகப்பெரிய ஆள். அவனுக்கென்ற ஒரு கொள்கை அவனுக்கென்ற ஒரு நடைமுறை என ஒரு கோட்பாடுடன் வெறித்தனமான வில்லனாக பவானி கதாபாத்திரம் வடிவமைக்கபட்டிருக்கும். விஜய் சேதுபதி நடிப்பை பற்றி சொல்ல வார்த்தையில்லை அவர் சாதாரணமான கதையையே நேர்த்தியாக தத்ரூமாக நடிக்க கூடிய ஆள். இந்த படத்திலும் அப்படியே எதார்த்தமாக நடித்திருப்பார். தெய்வீக மனிதாரகவும் பிரச்சனை என்றால் குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக தாக்கும் ஆளாகவும் இருந்திருப்பார்.
குறிப்பாக இடைவேலையின் போது “வாத்தி நான் சொல்ல போறது ஒன்னும் உனக்கு புதுசு இல்ல. இருந்தாலும் நான் சொல்றேன் நீ கேளு, im waiting” என்று விஜய் பிரபலமான பேசும் வசனத்தை பேசி திரையரங்கை அதிர வைத்திருப்பார். விஜய் ஆக்ரோஷத்தில் உன்னை கொல்லாம விட மாட்டேன் என்று அழுதபடி கத்துவார். மறுபுறம் விஜய் சேதுபதி நய்யாண்டி தனத்துடன் சிரித்து கொண்டே “சரி வா..” என்று சொல்வதெல்லாம் இன்றும் பலருக்கு நெருக்கமான காட்சி.
3. லோகேஷ் கனகராஜ்
‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின் அவரது மூன்றாவது படமாக உருவானது தான் மாஸ்டர். அதிரடியாக உச்ச நட்சத்திரத்துடன் இணைந்து திரையுலகின் கவனம் பெற்றார். வித்தியாசமான கதையுடன் விஜயிடம் நெருங்குவது ஒருபுறம் இருந்தாலும் அந்த கதையை நேர்த்தியாக மக்களுக்கு பிடித்தது போல் மாற்றக் கூடிய திறமை பாராட்டக்குரியது.
சிறிது சிறிதாக கதையை மெருகேற்றி விஜய் மற்றும் விஜய் சேதுபதியை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் திரைக்கதை நேர்த்தியாக கொடுத்திருப்பார். திரைக்கதையுடன் போதை அரசியலை கருவாக கொடுத்திருப்பார் லோகேஷ். என்னத்தான் விஜயும் விஜய் சேதுபதியும் தங்களது நடிப்பின் மூலம் திரையை அலங்கரித்தாலும் அவரது செயல்முறையை வடிமைத்த லோகேஷ் பாராட்டுக்குரியவராய் மாறுகிறார். போதை அரசியலை இதற்கு முன்னால் வெளிவந்த கைதி படத்திலும், கடந்த ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திலும் பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பிண்ணனி இசை & பாடல்கள்
சம கால தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்தர். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளுக்கு இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்தாலே படம் ஹிட் என்ற மார்கெட்டை உருவாக்கி விட்டார். அப்படி ஒரு இசையை இளைஞர்களுக்கு பிடித்தது போல் கொடுத்து படத்தின் காட்சிகளை சுவாரஸ்யமாக மாற்ற கூடிய திறன் படைத்தவர் அனிரூத். அவரது திரைப்பயணத்தில் முக்கிய படமாக மாஸ்டர் உள்ளது. விஜய் அனிரூத் கூட்டணி ஏற்கனவே ‘கத்தி’ படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடல இசையை வெளியிட்டு அனைத்து ரசிகர்களையும் துள்ளல் போட வைத்தார் . உலகளவில் டிரன்ட் ஆன வாத்தி கம்மிங், திரையில் வேறு ஒரு பரிணாமம் எடுத்து விஜயின் அதிரடி ஆட்டத்திற்கு தீனி போட வைத்தது. அதன் பின் குட்டி ஸ்டோரி, அந்த கண்ண பாத்தாக்கா, quit பண்ணுடா, பொளக்கட்டும் பர பர, போன போகட்டும் வாத்தி ரைடு என்று அனைத்து பாடல்களும் மெகா ஹிட். இன்றும் பலரது விருப்பமான பாடல் பட்டியலில் மாஸ்டர் திரைப்பட பாடல் இருந்து வருகிறது.
பாடல் மட்டுமா, பின்னணி இசையில் மிரட்டி எடுத்திருப்பார். பேருந்தை துரத்தி வரும் விஜயின் அறிமுக காட்சி, விஜய் கேட்கும் ஆங்கில பாடல்களும் அவர் சிறார் சீர் திருத்த பள்ளியை திறந்து கொண்டு மாஸ்டராக வரும் காட்சியிலும் இடைவெளி காட்சியிலும் ‘அண்ணன் யாரு தளபதி’ என்ற பில்டப் இசைக்கும் திரையை அதிர வைத்தவர் அனிரூத். விஜய் கு மட்டுமல்ல பவானி கதாபாத்திரம் ஏற்று நடித்த விஜய் சேதுபதிக்கும் அவருடைய trade mark punch க்கும் பின்னணி இசை பேசப்பட்டிருக்கும். குறிப்பாக சூப்பர் ஹிட் அடித்த விஜயின் கில்லி படத்தின் பின்னணி இசையை மாற்றுருவாக்கம் செய்து இந்த படத்தில் பயன்படுத்திருப்பார். நிச்சயம் மாஸ்டர் படத்தின் பின்னணி இசையில் அசத்தியிருப்பார் அனிரூத்
5. தொழில்நுட்ப கலைஞர்கள் :
மெட்ரோ ரயில் சண்டை காட்சிகளும்,இடைவெளி காட்சியுயம் , கிளைமேக்ஸ் விஜய், விஜய் சேதுபதி சண்டை காட்சியும் சிறந்த ஒளிப்பதிவை கையாண்டிருப்பார் ஒளிப்பதிவாளர் சத்தியன் சூரியன். மேலும் சிறுவயது பவானி கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் வரும் காட்சிகளின் ஒளிப்பதிவு அனைத்தும் வேறு தரத்தில் அமைந்திருக்கும். காவல் நிலைய சண்டைகாட்சி, கிளைமேக்ஸ் மாட்டுக்கறி தொழிற்சாலை, சிறுவர் சீர்திருத்த பள்ளி போன்ற பல காட்சிகளை கச்சிதமான வடிவமைத்திருப்பார் கலை இயக்குனர் சதீஷ் குமார். மற்றும் படத்தொகுப்பு அசத்தலான சண்டை காட்சிகளை ரசிக்கும் படியும், விஜய் பேருந்தை துரத்தி கொண்டு ஓடி வரும் போதும், கபடி காட்சிகளும், விஜயை சிறுவர் சீர் திருத்த பள்ளியில் இருந்து விரட்ட சிறுவர்கள் துன்புறுத்தும் இரவு காட்சிகள், விஜய் கதாபாத்திரம் வடிவமைப்பு காட்சிகள், பாவனி வளர்ந்து வரும் காட்சிகளும் ரசிக்கும் படி கொடுத்திருப்பார்.