அசாத்திய திறமையாளும் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட் என எல்லா இடங்களிலும் தனது முத்திரையை பதித்த நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் முத்திரை பதித்து விட்டார். ஆம் முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான வாத்தி (SIR) திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்ற தனுஷின் வாத்தி திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்து தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜையோடு தொடங்கப்பட்டது.
இதனிடையே தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மிக பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளோடு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முக்கியமான ஒரு போர் காட்சி படமாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகளும் புகைப்படங்களும் பரவின. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மிக முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கேப்டன் மில்லர் அப்டேட்… ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செலிப்ரேஷன் ஆஃப் லைஃப் BGM இசையமைத்த பிறகு படமாக்கப்பட்டது. அதற்குப் பிறகு தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அதே போன்று 3-4 BGMகள் படமாக்குவதற்காக இசை அமைத்துள்ளேன். பித்து பிடிக்க வைக்கும் BGMகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதில் உற்சாகமாக இருக்கிறேன்.” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த செலிப்ரேஷன் ஆஃப் லைஃப் BGM ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்காத ஒரு BGMஆக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அது போன்று 3-4 BGMகள் கேப்டன் மில்லர் படத்தில் இருக்கும் என்ற இந்த அப்டேட் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி உள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரின் அந்த அப்டேட் இதோ…