கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் துருவ நட்சத்திரம் திரைப்படம் திடீரென கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இப்படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனையடுத்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது எமோஷனலான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,

ஒரு இலக்கு. நிறைய பேரார்வம். மேலும் தளராத அர்ப்பணிப்பு கொண்டு துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பேப்பர் மற்றும் பேனா முதல் இன்றுள்ள படம் வரை உருவாக்கி இருக்கிறோம். மற்ற எல்லா விஷயங்களும் எங்களுக்கு எதிராக செயல்பட்டாலும் எங்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் படத்தை உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியிட உதவும் என்பதை நம்புகிறோம்.
நவம்பர் 24 ரிலீஸ் தேதி என அறிவித்த போது அதை செய்ய மலைகளை நகர்த்த முயற்சி செய்தோம். திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனதற்கு நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை என்று சொன்னால் அது பொய்.
இந்தப் படத்தை நாங்கள் கைவிடவில்லை என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்த அறிவிப்பு. இந்த தடைகளை தாண்டி உங்களுக்காகவே துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் விரைவில் வெளியிட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் பார்வையாளர்களாகிய நீங்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய சீயர் லீடர்களாக இருந்திருக்கிறீர்கள்.
உங்களிடமிருந்து வரும் தீராத அன்பும் ஆதரவும் எங்களுக்கு அமோகமாகவும் & இன்னும் உறுதியளிக்கும் வகையிலும் இருக்கிறது.எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன, எங்கள் வலிமையின் தூணாக இருப்பதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
இந்த இறுதிக் கட்டங்களுக்குச் செல்லும்போது, எங்களின் படைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். படம் விரைவில் வெளிச்சத்தைக் காணும், மேலும் ஜான் & குழுவினரின் இந்த சினிமா பயணத்தைத் தொடங்க நாங்கள் காத்திருக்க முடியாது.


என தெரிவித்திருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் எமோஷனலான அந்த அறிக்கை இதோ...

இயக்குனர் கௌதம் உடன் முதல் முறையாக சீயான் விக்ரம் இணைந்த அதிரடி படம் தான் துருவ நட்சத்திரம். ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, SR.கதிர் மற்றும் விஷ்ணு தேவ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பக்கா ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.