தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகவும் இளைஞர்களின் துள்ளலான ரசனைக்கு தீனி போடும் படங்களை கொடுப்பவருமாக இருப்பவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனாராக அறிமுகமான வெங்கட் பிரபு தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடும் அளவு படங்களை கொடுத்து வருகிறார். அதன்படி சரோஜா, கோவா, பிரியாணி, மாஸ், சென்னை 28 பாகம் 2, மன்மத லீலை என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியானது. இவரது திரைபயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாகவும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவும் இருந்து வரும் மங்காத்தா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வெங்கட் பிரபு புகழ் மிகப்பெரிய அளவு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முன்னணி ஹீரோக்களான அஜித், சூர்யா, கார்த்தி சிம்பு ஆகியோரை வைத்து படம் இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தற்போது வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் முன்னதாக வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்தியது.
அதன்படி தனது அடுத்த படத்தை தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் இயக்க திட்டமிட்டார் வெங்கட் பிரபு. கஸ்டடி என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். மேலும் படத்தில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர்.
பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படம் வரும் மே மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திற்கான அடுத்தடுத்த பட விளம்பர வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் படக்குழு.
இந்நிலையில் நடந்து வரும் ஐபில் கிரிக்கெட் தொடரில் சென்னை ஹைதராபாத் அணி ரசிகர்கள் சண்டையிடுவது போல் சென்னை ஆதரவு தெரிவித்து வெங்கட் பிரபுவும் ஹைதராபாத் ஆதரவு தெரிவித்து நாக சைதன்யாவும் சண்டையிடுவது போலவும் இறுதியில் பிரேம் ஜி இருவருக்கும் மத்தியசம் செய்வது போலவும் கலகலப்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வீடியோவின் இறுதியில் கஸ்டடி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.