கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இப்படத்தை பற்றி என் சிந்தையில் இருக்கும் விஷயங்களை வேறொரு மாடுலேக்ஷனில் கூற வேண்டும் என்று நினைத்தேன். ஆகையால் வடசென்னை வாசனையை கலந்து இந்த கதையை கூற விரும்புகிறேன்.
.வருஷம் 2006, தேதி நியாபகம் இல்ல... நைட்டு பத்து மணி இருக்கும்... எங்க ஏரியால புதுப்பேட்டை படத்தோட போஸ்டர் ஒட்றாங்க. பொதுவா இந்த போஸ்டர் ஒட்றவங்க நைட் நேரத்துல ஒட்டிட்டு போயிடுவாங்க. அப்போதான் காலைல அங்கிருக்கவங்க கண்ணுல போஸ்டர் படும். அந்த போஸ்டர்ல் லாங் ஹேர்ஸ்டைல, கையில பெரிய பொருளோட(கத்தி) தனுஷ். அவங்க அண்ணன் படம்முன்னு இஷ்டத்துக்கு நடிக்க வைக்கிறான் போலனு ஏரியாவே தனுஷை கிண்டல் பண்ணுது. கொஞ்ச நாள் கழிச்சு இந்த படம் ரிலீஸாகுது. ஏரியால கெத்தா சுத்துற அண்ணனுங்க இந்த படத்த கொண்டாடுறானுங்க. அப்படி என்ன இருக்கு ? இந்த படத்திலனு தியேட்டர்ல போயி பாத்தேன். படம் ஃபுல்லா கொக்கிகுமாரு தான். கொக்கி குமார் என்ன செஞ்சான் ? எங்க போறான் ? எப்படி ஆவான் இந்த மாதிரி கேள்விகள் தான் ஓடிட்டு இருக்கு...
.தனுஷ் எனும் கலைஞன் :
.தாயை கொலை செய்து விடும் தந்தை, கதவை திறக்கும் போது பதட்டம் கலந்த பயத்தில் பேண்ட்டோடு சிறுநீர் கழித்து ஓடுவதில் இருந்து ஆரம்பிக்கும் தனுஷின் நடிப்பு. ஃபிரேம் பை ஃபிரேம் கொக்கி குமாராகவே வாழ்ந்திருப்பார் தனுஷ். தொண்டையில ஆபரேசன் ... என்று பேசும் வசனம் துவங்கி, என்ன விட்டிங்கனா,, நான் உங்கள விடுறேன் என வசனங்கள் வாயிற்கதவில் நிற்கும்.
செல்வா எனும் சிற்பி :
.அழுகையில் எதார்த்தத்தை கையாண்டிருப்பார் செல்வா. யாருக்குத் தான் அம்மான்னா பிடிக்காது என்று கண்களில் கண்ணீருடன் கூறுவதெல்லாம் ரீகிரியேட் செய்ய முடியமா என்று கேட்டால் சந்தேகம் தான். இரண்டாம் பாதியில் எதிரிகளுக்கு பயந்து குழந்தையை குப்பை தொட்டியில் போடுவது போல் ஒரு காட்சி. அப்பா செத்துருவேன்... நீ பயப்புடாத கண்ணு.. யார்னா நல்லவங்க வருவாங்க தூக்கினு போறதுக்குனு என்று குழந்தையிடம் தனுஷ் பேசும் காட்சி. ரவுடியாக இருந்தாலும் தகப்பனின் அன்பை அலைமோத வைத்திருப்பார் செல்வா.
பார்க்க தவறிய விஜய் சேதுபதி :
.படத்தில் ஒரு சாலையோர கடையில் அனைவரும் பரோட்டா ஆம்லெட் என்று சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள். அப்போது ஜானு நைட்டு சிக்கன் வேணும் என்ற வசனத்தை பேசுவார் சேது. பின் அன்பு சாரிடம், அண்ணா போலீஸ் எங்கள புடிச்சிட்டு போச்சா அதுல மிஸ்டேக்கா வந்து மாட்டிகிட்டான் என்று விஜய்சேதுபதி பேசிய வசனங்களை பார்க்க தவறியவர்களில் நானும் ஒருவன்.
பாராட்டு மழையில் பாலா சிங் :
.அன்பு சார் என்று தனுஷ் சொன்னதும், வெட்கம் கலந்த கெத்தோடு ஒரு முகபாவனையைக் காட்டியிருப்பார். தனுஷ் அடித்ததை விவரிக்கும் காட்சியில், நான் பாத்தன் டெல்லி.. பொங்குனு ஒரு அடி… நெஞ்செலும்பே உடைஞ்சுருச்சாமே! என்று கூறும் ஸ்டைல் பலே.
அழகு சேர்த்த அழகம் பெருமாள் :
நிஜ அரசியல்வாதிகளே தோற்று விடுவார்கள். இவர் கொண்டு இன்று நாம் பார்த்து ரசிக்கும் மீம்ஸே இதற்கு எடுத்துக்காட்டு. ஏத்தி விட்டு அழகு பார்ப்பவன்டா.. கால்ல விழு குமாரு என்று கூறும் வசனமாகட்டும். கெட்ட வார்த்தையில் பேசி விட்டு, மேடையில் திரை விலகியதும் செந்தமிழ் கவிஞன் நான் என்பதெல்லாம் தெறி.
துணை நடிகர்களே துணை :
ஜூனியர் ஆர்டிஸ்டுகள் அவர்களின் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். அதில் ஒருவர் மூணு வேளையும் பிரியாணியா போட்டாங்ணா என்று எடுத்துரைக்கும் காட்சியெல்லாம் எதார்த்தத்தின் உச்சம். தனுஷின் அப்பாவாக வரும் ரமேஷ், கொக்கி குமாரின் மச்சனாகிய மணி என்று அனைவரும் ஸ்கோர் செய்திருப்பார்கள்.
யுவன் ஏரியா உள்ள வராத:
நடனமாட வைக்கும் வரியா பாடல், வாழ்க்கையை எடுத்துக்கூறும் ஒரு நாளில் பாடல், ஏரியா கெத்தை காட்ட எங்க ஏரியா உள்ள வராத பாடல், கமல் ஹாசன் குரலில் நெருப்பு வாயினில் என அனைத்தும் ஹிட். கேஸட் துவங்கி ஐ-ட்யூன் வரை பிலேலிஸ்டின் செல்ல பிள்ளை.
தனுஷின் நடிப்பா ? செல்வாவின் இயக்கமா ? யுவனின் இசையா ? இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளால் கூட விடை கண்டுபிடிக்க முடியாது. இன்றோடு இந்த படத்திற்கு வயது 14. சோழ தேசமாக இருக்கட்டும் புதுப்பேட்டையாக இருக்கட்டும் நம்மை அழைத்து சென்ற இயக்குனர் செல்வராகவன் மற்றும் புதுப்பேட்டை படக்குழுவினருக்கு கலாட்டா நிருபர் சக்தி பிரியனின் சமர்ப்பணம்.