தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மோகன் பாபு. 70களில் திரையுலகில் நுழைந்தவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு அல்லாது தமிழ் திரையுலகிலும் சிறந்த நடிகராக ஜொலித்தவர்.
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அண்ணை ஓர் ஆலயம், கமல் ஹாசனுடன் குரு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் மோகன் பாபுவுக்கு மனோஜ் மஞ்சு, விஷ்ணு மஞ்சு ஆகிய மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கின்றனர். முன்று பேரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர். லட்சுமி மஞ்சு, தமிழிலும் கடல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் மோகன்பாபு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜல்லப்பள்ளியில் உள்ள பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஒரு டொயட்டோ கார் வேகமாக வந்தது. பங்களாவின் கேட்டுக்கு அருகே வந்த காரிலிருந்து 4 பேர் இறங்கினர். உள்ளே மோகன்பாபு இருக்கிறாரா? என்று செக்யூரிட்டிகளிடம் கேட்டுள்ளனர். அவர்கள் நீங்கள் யார், என்ன விவரம் என்று கேட்க, செக்யூரிட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகவலை நடிகர் மோகன்பாபுவுக்கு அவர்கள் தெரிவிக்க, கேட்டில் இருந்து வேகமாக காரில் ஏறி தப்பி ஓடியது அந்த கும்பல். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து அவரும் நடிகை லட்சுமி மஞ்சுவும் பஹடிஷரிபஃப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். எதற்காக அவர்கள் மோகன்பாபு வீட்டுக்குச் சென்றனர் ? அவர்கள் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
வெகு நாட்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார் மோகன் பாபு. பக்தவச்சலம் நாயுடு என்ற பாத்திரத்தில் நாயகன் நெடுமாறனின் வழிகாட்டியாக பயணித்துள்ளார். 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.