தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இளைஞர்களை கவர்ந்து பின் பாடலாசிரியராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் என்று பல திறமைகளுடன் தற்போது வலம் வருபவர் ஆதி. தற்போது இவர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வீரன்’. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவோடு வெளியாகி வெற்றிகராமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பரவலாக ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த வீரன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ..

நடிகர்கள்

வீரன் திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் நடிக்கின்றார். மேலும் படத்தில் முனீஸ்காந்த், காளிவெங்கட் இருவருடைய கூட்டணியில் வரும் காமெடி காட்சிகள் முன்டாசுபட்டி படத்திலிருந்தே ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அவர்களின் கூட்டணியில் உருவாகும் வீரன் படத்திலும் காமெடி காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பது முன்னோட்டம் மூலம் தெரிய வருகிறது. மேலும் படத்தில் வில்லனாக வினய் நடிக்கின்றார். துப்பறிவாளன், டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து வினய் இப்படத்திலும் அட்டகாசமான நடிப்பை வெளிபடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஹிப் ஹாப் தமிழா இசை

ஆதியின் இசை என்றாலே தனி வைப் வந்து விடும். ஆல்பம் பாடல்கள் தொடங்கி சினிமா படங்கள் வரை ஆதியின் இசைக்கே தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. முன்னதாக படத்திலிருந்து வெளியான பப்பர மிட்டா, தண்டர்காரன், வீரன் திருவிழா போன்ற பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சூப்பர் ஹீரோ கதைக்களம்

மேல்நாட்டில் சகஜமான கதைக்களமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் முதல் முறையாக தமிழில் உருவாகியுள்ளது. முன்னதாக மலையாளத்தில் டோவினோ தமாஸ் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து தென்னிந்தியாவில் வெளியாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் வீரன் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் முதல் பார்வை தொடங்கி இன்று வரை வரவேற்று வருகின்றனர்.

இயக்குனர் ARK சரவணன்

அட்டகாசமான காமெடி காட்சிகளுடன் மாயஜால த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மரகதநாணயம்’ இப்படத்தையடுத்து இயக்குனர் ARK சரவணன் இயக்கும் இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு உயர்ந்து வருகிறது.

ஹிப் ஹாப் ஆதி

இளைஞர்களை இசையின் மூலமாக மட்டுமல்லாமல் தன் நடிப்பின் மூலம் கவர்ந்து திரைத்துறையில் வெற்றிகரமான நடிகராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி முதல் முறையாக கடின உழைப்பின் மூலம் தன் நடிப்பை மெருகேற்றி சூப்பர் ஹீரோவாக களமிறங்கும் வீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.