ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பின்றி திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரியளவில் முடங்கியிருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ முன்னணி நடிகர்கள் முன்வர வேண்டும் என ஃபெப்ஸி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்று ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம், தனுஷ் ரூ. 15 லட்சம், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் குடும்பத்தினர் ஒட்டுமாய் சேர்த்து ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் தலா ரூ. 10 லட்சம் கொடுத்தும் இன்னும் சிலர் அரிசி மூட்டைகள் கொடுத்தும் உதவினர்.
இந்த வரிசையில் தற்போது நடிகை நயன்தாரா ரூ. 20 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். படப்பிடிப்பு ரத்தான நாளில் தொடங்கி தன்னை சார்ந்திருக்கும், தன் படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு அவர்களது தேவையறிந்து உதவி வந்த நயன்தாரா, தற்போது ஃபெப்ஸி சங்கத்திற்கும் ரூ. 20 லட்சம் வரை கொடுத்து உதவியுள்ளார்.
முன்னணி நடிகர்கள் பலருமே ரூ. 10 லட்சம் வரையில் மட்டுமே கொடுத்துள்ள நிலையில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா ரூ. 20 லட்சம் கொடுத்திருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள ஃபெப்ஸி தொழிலாளர்கள் சங்கம் அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நல்ல இதயம் கொண்ட நயன்தாராவுக்கு சங்கம் சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர். இதனால் தான் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.