கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அறிவித்தார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் அந்த தகவலை உறுதி செய்தார். எஸ்.பி.பி-ன் மறைவு குறித்து பல திரைப்பிரபலங்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இசை ஜாம்பவான் எஸ்.பி.பி-ன் மறைவு செய்தி பட்டி தொட்டியெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 74 வயதாகும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜூன் 4, 1946ல் பிறந்தார். 1966ம் ஆண்டு சினிமாவுக்காக பாடும் பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார்.
இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ராசியான பாடகராகவும் இருந்திருக்கிறார். தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம்.
எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மறைவு திரை உலக பிரபலங்களை மட்டுமல்ல அரசியல் தலைவர்களை மட்டுமல்ல கோடான கோடி இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொலைக்காட்சி முன்பு அமர்ந்து பலரும் கண்ணீர் விட்டு வருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், பல மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை உலக பிரபலங்களும். பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் பாட்டுடை தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று காலம் என்பதால் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இன்று இரவு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். நாளை காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும்