தமிழ் சினிமாவில் பெரும்பாலும் தொலைகாட்சியிலிருந்து வெள்ளித்திரையில் ஜொலித்தவர்கள் எண்ணிக்கை ஏராளம். அதனாலே பலரது கனவாக தொலைக்காட்சியினை தொட்டுவிட்டால் திரைப்படங்களில் ஒரு பங்காக வந்துவிடலாம் என்ற எண்ணம் இருந்து வருகிறது. அதன் படி திறமைகளை வெளிக்கொண்டு வந்து வெகுஜன மக்களுக்கு அடையாளம் காட்டும் தொலைகாட்சியில் இருந்து வந்த பிரபலங்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சரிகமப’ நிகழ்ச்சி மக்களிடம் மிக பிரபலம். அதில் கடந்த 2018 ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ரமணியம்மாள். அக்கம்பக்கம் வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவர் ரமணியம்மாள் கேள்வி ஞானத்தில் பாடல்களை பாடிக் கொண்டு இருந்தவரை வேலை பார்த்து வந்த வீட்டின் உரிமையாளரால் ஜீ தமிழ் சரிகம போட்டியில் பங்கேற்கப் பட்டார். அட்டகாசமான பாடல்களை தனித்துவமான குரல்வளம் கொண்டு இளைஞர்களுடன் போட்டியிட்டு இறுதி சுற்றுக்கு முன்னேறியவர் ரமணியம்மாள். தன் திறமையினால் தொலைக்காட்சியே அவருக்கு ‘ராக்ஸ்டார் ரமணியம்மாள்’ என்ற பெயரை சூட்டியது. இறுதி சுற்றில் மேடை அதிர பாடிய ரமணியம்மாள் இரண்டாம் இடத்தை பிடித்து நிலம் பரிசாக பெற்றார். மேலும் பரிசு தொகையாக சில லட்சங்களும் பெற்றார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான ரமணியம்மாள் தமிழ் சினிமாவில் சண்டக்கோழி 2 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘செங்கரட்டான் பாறையிலே’ என்ற பாடலை பாடினார். மேலும் அதனை தொடர்ந்து ஜூங்கா, நெஞ்சமுண்டு நேரமையுண்டு, காப்பான் போன்ற படங்களில் பாடியுள்ளார். ரமணியம்மாள் ஜீ தொலைகாட்சிக்கு வருவதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். காதல், காத்தவராயன், மகான் கணக்கு, அலையோடு விளையாடு தெனாவட்டு, ஹரிதாஸ் போன்ற படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாடகராக மட்டுமல்லாமல் பொம்மை நாயகி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வறுமை காரணாமாக பத்து பாத்திரம் தேய்த்து வாழ்ந்து வந்த ரமணியம்மாள் தனது உழைப்பினால் தற்போது உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு தெரிந்த முகமாக மாறி பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் ரமணியம்மாள் தனது 69 வயதில் மூப்பினால் மறைந்துள்ளார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலர் ரமணியம்மாள் அவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.