‘விக்ரம்’ திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 67’. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பின் இணையும் இந்த கூட்டணி தற்போது தமிழ் சினிமாவில் தனி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் தளபதி 67 படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரத்யேக வீடியோவாக நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த படப்பூஜையில் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் லலித் மற்றும் ஜெகதீஸ் ஆகியோருடன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர் புஷ்கர், இயக்குனர் ரவிக்குமார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கான வீடியோ இணையத்தில் வைரலானாது. ரசிகர்கள் நேற்று முதல் இந்த வீடியோவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பூஜை விழாவில் விஜயுடன் துருதுருவென சுற்றி கொண்டு இருந்த குழந்தையை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்', 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த அர்ஜுனனின் மகள் என்று தகவல் வெளியானது. இதனையடுத்து நடிகர் அர்ஜுனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மகள் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் அவர், “எனது மகள் இயல் தளபதி 67 படத்தில் நடிக்கவிருப்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். உங்களது அன்பு மற்றும் ஆசிர்வாதங்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பதிவு விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் அர்ஜுனனின் பதிவின் கீழ் “அவள் மிகவும் அழகானவள்.. அவளுக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
She’s so adorable !!! Wishing her all the luck 🤗🤗❤️❤️
— Dulquer Salmaan (@dulQuer) February 1, 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 67 படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவுள்ளார். மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாகவும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவிருக்கின்றனர்.