சமகால தமிழ் திரையுலகில் தனக்கென்ற ஒரு பாதையை வகுத்து அதில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆரம்ப காலகட்டத்திலிருந்து தனது கொள்கைக்கு ஏற்ற கதையை கட்டமைத்து அதில் நட்சத்திரங்களை சேர்த்து அருமையான திரைக்கதையை கொடுப்பவர். அட்டகத்தி’ முதல் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் வரை வித்யாசமான உணர்வுகளை கையிலெடுத்து தமிழ் சினிமாவில் பயணித்திருக்கிறார். விமர்சன ரீதியாக பிரச்சனையை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பல வெற்றி படங்களையும் சில தோல்வி படங்களையும் கொடுத்தவர் என்றாலும் பா ரஞ்சித் படங்களுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. மக்கள் சார்ந்த கதைகளையோ முன் காலத்தில் தொடங்கும் கதைகளையோ கையிலெடுத்தால் பா ரஞ்சித் திரைப்படம் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை மக்களிடம் கொடுத்து சாதித்துள்ளார். அதன்படி 'மெட்ராஸ்', 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்கள் அவரது திரைப்பயணத்தில் மைல்கல்கள்.

அப்படி மக்கள் சார்ந்தும் காலம் கடந்த கதைகளத்தில் தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் 'தங்கலான்'. கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் கதாநாயகனாகவும் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பா ரஞ்சித் உடன் இணைந்து இப்படத்தினை எழுதியுள்ளார் எழுத்தாளர் தமிழ் பிரபா. ஒளிபதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய செல்வா படத்தொகுப்பு செய்கிறார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தங்கலான் படம் குறித்து புதிய அப்டேட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் "உற்சாகம் மிகுந்த தங்கலான் திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. தங்கலான் படத்திற்காக தற்போது வரை இரண்டு பாடல்களை பதிவு செய்து முடித்துள்ளேன். இரண்டு பாடல்களும் நல்ல விதமாக வந்துள்ளது. அதில் சர்வதேச தரத்திலான ஆடியோவை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கு முன்னாள் இதை நான் முயற்சித்தது இல்லை." என குறிப்பிட்டுள்ளார்.

பா ரஞ்சித்துடன் ஜி.வி பிரகாஷ் முதல்முறை இணைந்துள்ள திரைப்படம் இது என்பதால் இப்படத்தில் புதுவிதமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. ஜி.வி பிரகாஷ் பொதுவாகவே பிரம்மாண்டமான படங்களுக்கு நேர்த்தியாக இசை கொடுப்பவர். ஒவ்வொரு புதிய படங்களிலும் தரமான இசை அனுபவத்தை அளிக்கக்கூடியவர் இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் தங்கலான் பாடல்கள், பிண்ணனி இசை ரசிகர்களை குதூகலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.