காலம் கடந்தும் சில படங்கள் தான் ரசிகர்களின் ரசனை தன்மையுடன் அப்படியே இருக்கும். ஒவ்வொரு காலக் கட்டத்திற்கும் அந்த திரைப்படம் புத்தியிர் பெற்றுக் கொண்டே இருக்கும். அத்தகைய திரைப்படங்களுக்கும் அனைத்து வயது தரப்பிலும் ரசிகர் கூட்டம் இருந்து வரும். அப்படி காலம் கடந்து ரசிகர்களின் ரசனை தன்மைக்கு மாறாமல் இருந்து வரும் திரைப்படம் கரகாட்டகாரன்.

அதன் சாரம் மாறாமல் ரசிகர்களால் 34 வருடங்கள் கழித்தும் கொண்டாடப்படும் திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’ . கடந்த 1989 ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இப்படம் நகைச்சுவை, காதல், சோகம், அட்டகாசமான கிளைமேக்ஸ் என்று முழு விருந்து போல் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாதக் கணக்கில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்றைய நாளில் மதுரையில் நடனா, நாட்டியா, நர்த்தனா திரையரங்கில் ஓராண்டுக்கும் மேலாக 425 நாட்கள் ஓடி கவனம் ஈர்த்தது. தன் வாழ்க்கையை திரையரங்கில் டிக்கெட் வழங்குபவராக தொடங்கிய ராம ராஜன் திரையரங்கத்தையே வாங்கும் அளவு உயர வைத்தது கரகாட்டகாரன். வசூல் ஒரு புறம் நேர்மறையான விமர்சனம் ஒருபுறம் என்று குவியும் போதே தமிழ் நாடு அரசி விருது உட்பட பல விருதுகளையும் தட்டி தூக்கியது. மேலும் கரகாட்டகாரன் திரைப்படம் ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

34 ஆண்டு கழித்தும் கரகாட்டக்காரன் திரைப்படம் கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு :

ராமராஜன்

மக்கள் நாயகனாக போற்றப்படும் ராமராஜன் அவருக்கே உரித்தான பாணியில் நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்தியது மட்டுமல்லாமல் கரகாட்டகாரன் போல் நடனத்தையும் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ரஜினி கமல் என்று உச்சக் கட்டத்தில் போட்டி போடும் காலத்தில் ராமராஜன் இருப்பை தெரிவித்த படமாக கரகாட்டக்காரன் படம் அமைந்தது.

கனகா

அழகான முகத்திற்கு பொருந்திய கண்கள். கனகா இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த காலம் அது. காதல் காட்சிகளிலும் சரி பிரிவில் வாடும் காட்சியிலும் சரி கனகாவின் நடிப்பு நேர்த்தி. கரகாட்டக்காரன் குடும்பத்தில் ஒரு பெண்ணாகவே இப்படத்தில் வாழ்ந்திருப்பார்.

கவுண்டமணி – செந்தில்

திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும் இவர்கள் கூட்டணி அமைந்தால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு கூடி விடும், என்று இந்த கூட்டணிக்கே தனி மார்கெட் இருந்த காலத்தில் படம் நெடுக கவுண்ட மணி செந்தில் கூட்டணி காமெடி காட்சிகள் அதகளம். அதுவும் குறிப்பாக வாழைபழம், சொப்பன சுந்தரி போன்ற காமெடியெல்லாம் எவர்க்ரீன் காமெடிகள். திரையரங்கம் முழுவதும் சிரிப்பலை பொங்க படம் இருந்தது. அதே நேரத்தில் கவுண்டமணி செந்தில் இரு பெரும் ஆளுமைகளை விஞ்சும் அளவு கோவை சரளா அவர் பங்கை கொடுத்திருப்பார்.

கங்கை அமரன்

அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்த கங்கை அமரன் அவர்களின் திரைப்பயணத்தில் மணிமகுடமாய் அமைந்த திரைப்படம் கரகாட்டக்காரன். எளிய கலைஞர்களின் வாழ்வியலை பேசும் படமாக கரகாட்டக்காரன் பார்க்கப் பட்டது. அன்றை நாட்களில் சிவாஜி பத்மினியின் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் மற்றொரு வடிவமாக கொண்டு அந்த கதையில் எவ்வளவு சுவாரஸ்யம் கூட்ட வேண்டுமோ கூட்டி திரைக்கதையில் ஏற்ற இறக்கங்கள் சரி பார்த்து அன்றைய ரசிகர்களின் மனவோட்டத்தை கணித்து மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார் கங்கை அமரன்.

இளையராஜா

இளையராஜாவினால் தான் அன்றைய திரைப்படம் ஓடியது என்று இலகுவாக சொல்லி விட முடியாது. ஆதாரத்துடன் நிருபிக்க பல படங்கள் உள்ளது. சுமாரான திரைப்படங்களையே தன் இசையினால் மெருகேற்றும் இளையராஜா சூப்பர் ஹிட் திரைப்படமாக கரகாட்டகாரன் திரைப்படத்தை சிலை செதுக்குவது போல் செதுக்கியிருப்பார். குறிப்பாக இந்த படத்தின் டைட்டில் பாடல் இளையராஜா பாடியிருப்பார். மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை இளையராஜா இசை தொடர்வதாக இருக்கும். அதை தொடர்ந்து ஊரு விட்டு ஊரு வந்து இளைஞர்களின் அன்றைய ஆந்தம் பாடலாக இருந்து வந்தது. மாங்குயிலே பூங்கியிலே இன்றும் தமிழ் சினிமாவில் தலை சிறந்த பாடல்களில் ஒரு பாடலாக உள்ளது. மற்றும் இந்த மான் உந்தன் சொந்த மான் பாடல் எவர்கிரீன் மேலாடியாக இருந்து வருகிறது. இப்படி படத்தில் இருந்த ஒவ்வொரு பாடல்களும் பட்டி தொட்டி எங்கிலும் ஒலித்து கொண்டும் கொண்டாடப்பட்டும் இருந்தது. பாடல்கள் மட்டுமல்லாமல் காட்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட இளையராஜா கையாண்ட பின்னணி இசை அதிசிறப்பு என்றே சொல்லலாம். எளிய கரகாட்ட கலைஞர்களின் வாழ்வியலை வெகுஜன மக்கள் கொண்டாடும் திரைப்படமாக கொடுத்து இன்றும் புத்துயிருடன் இருக்கும் கரகாட்டகாரன் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு பொக்கிஷம் .