தமிழ் சினிமாவில் முதல் படத்தின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றிய இவர் கடந்த 2018 ல் வெளியான பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியான இப்படத்தின் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, மாரி முத்து, பூ ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரியேரும் பெருமாள் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய செல்வா RK படத்தொகுப்பு செய்திருப்பார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயாணன் இசையமைத்திருப்பார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடலும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

கல்வியின் முக்கியத்துவம் அதை அடைய எவ்வளவு இன்னல்களை ஒரு சமூகத்தில் இருந்து வரும் இளைஞன் சந்திக்கும் நிகழ்வுகள், அடக்குமுறை என்று பேசி சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக வெளியான பரியேரும் பெருமாள் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது. மேலும் அழுத்தமான தாக்கத்தை கொடுத்து மாரி செல்வராஜ் ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதில் கொண்டாடப்பட்டார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் வெற்றி படமாக அமைந்தது.

இன்றும் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது. பரியேரும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் கர்ணன் படத்தை எடுத்து முடித்து வெற்றி படமாக கொடுத்தார். தற்போது அவரது மூன்றாவது திரைப்படம் மாமன்னன் ரிலீஸுக்கு வெளிவரவுள்ளது. மேலும் தொடர்ந்து துருவ் விக்ரம் உடன் ஒரு படமும், தனுஷ் உடன் ஒரு படமும் இயக்கவுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் மாரி செல்வராஜ் இந்நிலையில் ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் நரனவாரே மாரி செல்வராஜின் பரியேரும் பெருமாள் படத்தை சமீபத்தில் திங்களூர் அரசு பள்ளி 12 ம் வகுப்பு மாணவர்களுடன் பார்த்துள்ளார்.

பின்னர் மாணவர்களுக்கு படம் குறித்தும் படத்தின் சாரம் குறித்தும் அறிவுரைகளுடன் விளக்கியுள்ளார். இந்த நிகழ்வு குறித்து கூடுதல் ஆட்சியர் மனிஷ் நரனவாரே தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் பரியேரும் பெருமாள் பட போஸ்டர்களையும் பதிவிட்டு அதனுடன்,

நான் திருநெல்வேலி சப்-கலெக்டராக இருந்தபோது, நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் 2018-ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த "பரியேறும் பெருமாள்". உண்மையாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திரைப்படம். இப்படிப்பட்ட திரைப்படத்தை தைரியத்துடன் எடுத்த மாரி செல்வராஜூக்கு ஹேட்ஸ்ஆஃப்.

மீண்டும் இந்தப் படத்தை நேற்று நான் பார்த்தேன். மாணவர்களிடம் இப்படம் குறித்து உரையாடினேன். "எல்லா மனிதர்களும் சமமாகப் பிறந்தவர்கள்” என்ற இந்தப் படத்தின் முக்கியமான செய்தியை மாணவர்களுக்கு பகிர்ந்தேன்” என பதிவிட்டுள்ளார். தற்போது கூடுதல் ஆட்சியரின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.