இந்திய சினிமாவின் பிரபல நடிகையாகயும் முன்னாள் பாராளுமன்ற லோக் சபா உறுப்பினருமான நடிகை திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தான் உயிரோடு இருப்பதாக தெரியப்படுத்தி இருக்கிறார். கடந்த 2003ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த அபி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. தொடர்ந்து தமிழில் 2004 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திவ்யா ஸ்பந்தனா, குத்து திரைப்படத்தில் ரம்யா என்ற பெயரில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் , வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த பக்கா காமெடி ஆக்சன் ட்ராமாவாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த கிரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா, தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் முதல் படமாக நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதுவரை திரைப்படங்களில் ரம்யா என்று குறிப்பிடப்பட்ட நடிகை திவ்யா ஸ்பந்தனா ரசிகர்கள் மத்தியில் "குத்து" ரம்யா என்று அறியப்பட்டார். பின்னர் வந்த தூண்டில் என்ற படத்தில் இருந்து திவ்யா ஸ்பந்தனா என அறியப்பட்டார். தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து தேசிய விருது வென்ற வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா, தமிழில் கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து கன்னட சினிமாவில் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிற நடிகை திவ்யா ஸ்பந்தனா, இதனிடையே அரசியலிலும் களமிறங்கினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற லோக்சபா உறுப்பினராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 6ஆம் தேதி திடீரென நடிகை திவ்யா ஸ்பந்தனா உயிர் இழந்தார் என செய்திகள் பரவின. 40 வயதாகும் நடிகை திவ்யா ஸ்பந்தனா திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செய்திகள் வெளியான சில நிமிடங்களிலேயே திவ்யா ஸ்பந்தனா தரப்பிலிருந்து அவர் நலமோடு இருப்பதாகவும் ஜெனிவாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஜெனிவாவில் இருக்கும் நடிகை திவ்யா ஸ்பந்தனா அடுத்த ஓரிரு தினங்களில் பெங்களூரு திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் புகைப்படம் வெளியிட்டு தான் உயிருடன் இருப்பதை தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் அவரது தோழியான சித்ரா சுப்ரமணியம் அவர்கள் தனது Twitter பக்கத்தில் அவரோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட அதற்கு பதிலளித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா, “விரைவில் நம்ம ஊரில் உங்களை சந்திக்கிறேன்” என பதிவிட்டது ஒட்டு மொத்தமாக இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. நலமோடு இருக்கும் நடிகை திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் இன்று பரவிய செய்தி சில நேரங்களுக்கு சமூக வலைதளத்தை பரபரப்பாக்கியது.