பொதுவாகவே திரைப்பட விழாக்களில் நடிகர்கள் அணியும் ஆடை அன்றைய சூழலில் நல்ல விதமாகவும் பேசப்படும். சர்ச்சைகளையும் எழுப்பி விடும். காலம் காலமாக மேல்நாட்டு நடிகர்கள் கடைபிடிக்கும் வித்யாசமான ஆடை அணிவகுப்பு சமீப காலமாக இந்திய சினிமா துறையில் நிகழ்ந்து வருகிறது. ஒரு நடிகரோ நடிகையோ பல திரைபிரபலங்கள் கலந்து கொள்ளும் திரைப்பட விழாவிற்கு செல்லும் போது வித்யாசமான அல்லது விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து மற்றவரை மட்டுமல்லாமல் விழாவில் கலந்து கொள்ளாத ரசிகர்களையும் கவர்ந்து விடுவார்கள். அத்தகைய ஆடைகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பேசப்படும்.

இந்நிலையில் கடந்த மே 16 ல் பிரான்ஸில் தொடங்கப்பட்ட கேன்ஸ் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் இந்திய பிரபலங்கள் உட்பட பல நாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இவ்விழாவில் ரெட் கார்பெட் வருகையில் பிரபலங்கள் வித்யாசமான உடை அல்லது ஆடம்பர உடையை அணிந்து நடந்து வருவது வழக்கம். அதன்படி இந்திய பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய், மிருனாள் தாக்கூர் ஊர்வசி ரவுதாலே, எமி ஜாக்சன் போன்றோர் உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த அலுமியம் மற்றும் கிரிஸ்டலினால் உருவாக்கப்பட்ட நீளமான ஆடை அணிந்து வந்திருந்தார். வித்யாசமாக தோற்றமளித்த இவரின் இந்த லுக் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அவர்கள் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த நீளமான ஆடையை ஒரு ஆண் உதவியாளர் பிடித்த படி இருந்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன்,

“காஸ்டியூம் அடிமைகள் என்ற வார்த்தையை கேள்விபட்டுள்ளீர்களா? அவர்கள் பெரும்பாலும் பெண்களாக தான் இருப்பார்கள்.. இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ஆடையை பிடித்த படி ஒரு ஆண் இருக்கிறார். இப்போதெல்லாம் இந்தியாவில் பெண் பிரபலங்களிடம் இந்த செயலை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சங்கடமான பேஷனுக்காக நாம் ஏன் முட்டாள்களாகவும் பெரும் சுமையாகவும் மாறுகிறோம்.. எனது கருத்துக்கும் ஐஸ்வர்யா ராய் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இது ஆடை அடிமைத்தனம் குறித்த கருத்து.. அதற்கு அவர் பொறுப்பல்ல.. அவர் ஒரு மாடல் மட்டுமே.. பேஷன் தூதுவர்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடம் பேஷன் ஷோக்கள், திரைப்பட விழாக்களில் இது போன்ற வித்யாசமான ஆடம்பர ஆடைகள் அணிவது வழக்கம் அது அவரவர் சுதந்திரம் என்று சிலர் எதிர்மறையான கருத்துக்களும் இது குறித்து பகிரப்பட்டு வருகிறது. மேலும் ரெட் கார்பெட்டில் ஆடை முழுவதுமாக புகைப்படத்தில் தெரிவதற்காக உதவியாளர் அதை முறையாக பிரித்து வைத்துள்ளார் என்று விளக்கமும் பகிரப்பட்டு வருகிறது.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் இந்தியாவில் சர்ச்சைக்குள்ளான திரைப்படம். நேர்மறையான விமர்சனங்களுடன் எதிர்மறையான விமர்சனங்களும் இப்படத்திற்கு எழுந்தது. தற்போது இந்த படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ‘தி வேக்சீன் வார்’ மற்றும் ‘டெல்லி பைல்ஸ்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.