இந்த ஆண்டு எந்தவொரு ஆரவாரமின்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் ‘போர் தொழில்’. அசோக் செல்வன் மற்றும் சரத் குமார் நடிப்பில் கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவான இப்படம் கடந்த ஜூன் 9ம் தேதி தமிழகமெங்கும் வெளியானது. Applause Entertainment, E4 Experiments, Epirus Studio ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் எந்தவொரு ஆரவாரமின்றி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. சீரியல் கொலைகளை கண்டறியும் போலீஸ் தலைமை அதிகாரியாக சரத்குமார் அவருக்கு துணையாக படத்தின் நாயகன் அசோக் செல்வன் கொலைக்கான காரணத்தையும் கொலைகாரனையும் கண்டு பிடிக்கும் வகையில் திரைக்கதை அமைந்த போர் தொழில் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் போர் தொழில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போர் தொழில் படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்த பதிவில், “போர் தொழில் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாள் முன்பு நான் தூக்கமில்லாமல் இருந்தேன். எனக்கு தெரியும் நாங்கள் சிறந்த படத்தை எடுத்திருக்கிறோம் என்று இருந்தாலும் போர் தொழில் திரைப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று விரும்பினேன். அது எனக்காக அல்ல.. என்னை நம்பி பணம் போட்டு பொருளாதார ரீதியாக ரிஸ்க் எடுத்த தயாரிப்பாளர்களுக்காக..

படத்திற்காக படத்தில் நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பல மாதங்கள் மிகப்பெரிய உழைப்பை கொடுத்தனர். நண்பர்கள் குடும்பங்களின் ஆதரவுடன் இப்படத்தை முடித்துள்ளேன். போர் தொழில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுவதை நான் அவர்களுக்கு காட்ட விரும்பினேன். இன்று அப்படம் வெளியாகி திரையரங்குகளில் 50 நாட்களை எட்டியுள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படத்திற்கு ஆதரவளித்த ஊடகங்கள், பத்திரிகையாளர்களு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மற்றும் படம் குறித்து எந்தவொரு ஸ்பாய்லர்ஸையும் பரப்பாமல் படத்தை கொண்டாடி வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. தற்போது இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் பதிவு இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்துகளுடன் வைரலாகி வருகிறது, ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று இந்த ஆண்டு பார்வையாளர்களை சர்ப்ரைஸ் செய்த போர் தொழில் திரைப்படம் வரும் ஆகஸ்ட் முதல் வாரம் சோனி லிவ் ஒடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.