தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த தாமிரா என்கிற காதர் மொகைதீன், கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகியோரை வைத்து ஷங்கர் தயாரிப்பில் ரெட்டைசுழி படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். முதல் படத்திலேயே பாரதிராஜா, பாலச்சந்தர் என்ற தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குனர்களை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார்.
இதையடுத்து சமுத்திரக்கனியை வைத்து ஆண் தேவை சினிமாவை எடுத்தார். நடிகர் சத்யராஜை வைத்து வெப் சீரிஸ் இயக்கி வந்தார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இன்று
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தாமிரா, இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர் என்று உருக்கமுடன் தெரிவித்திருந்தார் தனது முகநூல் பக்கத்தில்.
அவர் மீண்டு வந்துவிடுவார் என்று எல்லோரும் சொல்லி வந்த வேளையில் அவரின் மரணம் நட்பு வட்டத்தை கலங்க வைத்திருக்கிறது. தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் பாபுராஜா என்கிற பாபா பக்ருதீன் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கும் நிலையில், இன்றைக்கு தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மக்கள் அனைவரும் முறையான பாதுகாப்புடன் மாஸ்க் அணிந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறு, மற்ற நேரங்களில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கலாட்டா குழுமம் வேண்டி கேட்டுக்கொள்கிறது. முகக்கவசம்...நம் உயிர் கவசம் !!!